தாமதமாகும் மின் இணைப்பு: வங்கிக் கடனை செலுத்த முடியாமல் விவசாயிகள் தவிப்பு!
சிஎஸ்கேவுடன் நீண்ட காலம் பயணிக்கவுள்ள இளம் வீரர்; யாரைக் கூறுகிறார் அனில் கும்ப்ளே?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அந்த அணியுடன் நீண்ட காலம் பயணிக்கும் திறன் கொண்ட இளம் வீரரை கண்டுபிடித்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியது.
இதையும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஜோஸ் ஹேசில்வுட் சிறப்பாக செயல்படுவார்: ரவி சாஸ்திரி
இந்தப் போட்டியில் சென்னை அணிக்காக களமிறங்கிய இளம் வீரர் டிவால்ட் பிரேவிஸ் அதிரடியாக 25 பந்துகளில் 42 ரன்கள் குவித்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவர் அதிரடியாக 42 ரன்கள் குவித்ததன் மூலம், சிஎஸ்கே 154 ரன்கள் எடுத்தது.
அனில் கும்ப்ளே கூறுவதென்ன?
சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய டிவால்ட் பிரேவிஸ் சிஎஸ்கேவுடன் நீண்ட காலம் பயணிக்கும் திறன் கொண்ட வீரர் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: டிவால்ட் பிரேவிஸ் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடினார். சென்னை சேப்பாக்கம் திடலில் சிறப்பாக விளையாடுவது அவ்வளவு எளிது கிடையாது. தென்னாப்பிரிக்க அணிக்காகவும், முதல்தர கிரிக்கெட்டிலும் டிவால்ட் பிரேவிஸ் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதன் காரணமாகவே அவர் ஐபிஎல் தொடரில் இணைந்துள்ளார்.
இதையும் படிக்க: ஐபிஎல் தொடரில் எந்த அணியாலும் 300 ரன்கள் குவிக்க முடியும்: ரிங்கு சிங்
சென்னை சூப்பர் கிங்ஸின் அணியில்கூட அவர் கிடையாது. மாற்று வீரராக சென்னை சூப்பர் கிங்ஸுடன் இணைந்தார். பிரேவிஸ் சிஎஸ்கேவில் இணைந்தது எனக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு கிறிஸ் கெயில் மாற்று வீரராக பெங்களூரு அணியில் இணைந்ததை நினைவுபடுத்துகிறது. மாற்று வீரராக ஆர்சிபியில் இணைந்த கிறிஸ் கெயில், அணியின் மிக முக்கியமான வீரராக மாறினார். பிரேவிஸிடம் அனைத்து ஷாட்டுகளும் விளையாடும் திறன் இருக்கிறது. ரச்சின் ரவீந்திரா, ஆயுஷ் மாத்ரே, மதீஷா பதிரானா போன்ற அணியை கட்டமைப்பதற்கான இளம் வீரர்கள் சிஎஸ்கேவில் இருக்கிறார்கள். டிவால்ட் பிரேவிஸுக்கு சிஎஸ்கேவுடன் நீண்ட காலம் பயணிக்கும் திறன் இருக்கிறது என்றார்.
காயம் காரணமாக விலகிய இடதுகை வேகப் பந்துவீச்சாளர் குர்ஜாப்னீத் சிங்குக்குப் பதிலாக டிவால்ட் பிரேவிஸ் சிஎஸ்கேவில் மாற்று வீரராக இணைந்தது குறிப்பிடத்தக்கது.