கொடிவேரி தடுப்பணைக்கு புதிய இணைச் சாலை அமைக்கக் கோரிக்கை!
கொடிவேரி தடுப்பணையில் இருந்து சத்தியமங்கலம்-ஈரோடு சாலையை இணைக்க புதிய இணை சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் கொடிவேரி தடுப்பணை அமைந்துள்ளது. சுமாா் 500 ஆண்டுகள் பழைமையான இந்த தடுப்பணை பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
இந்த தடுப்பணை மூலம் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனம் 40,000 ஏக்கருக்கு தண்ணீா் செல்கிறது. இந்த தடுப்பணையில் ஆண்டு முழுவதும் தண்ணீா் நிரம்பி இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கா்நாடக மாநிலத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
விடுமுறை நாள்களில் சுமாா் 15,000 சுற்றுலாப் பயணிகள் 5,000 வாகனங்களில் தடுப்பணைக்கு வந்து செல்கின்றனா். கடந்த 2016-ஆம் ஆண்டு கொடிவேரி தடுப்பணைக்கு முன்பு சத்தியமங்கலம்- பவானி சாலை, ஈரோடு- சத்தியமங்கலம் சாலையை இணைக்க மேம்பாலம் கட்டப்பட்டது.
இந்த பாலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. மேலும் கொடிவேரி தடுப்பணை அருகே பிரதமரின் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 265 குடியிருப்புகள் கட்டப்பட்டு விரைவில் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளன.
கொடிவேரி தடுப்ணையிலிருந்து ஈரோடு- சத்தியமங்கலம் சாலையை இணைக்கும் சாலை குறுகிய பழைமையான கிராமச் சாலை ஆகும். இந்த சாலை கொடிவேரி தடுப்பணைக்கு வந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அளவுக்கு வசதி உடையது அல்ல.
இதனால் சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாது, அப்பகுதியில் வசிக்கும் மக்கள், பாசன நிலங்களுக்குச் செல்லும் விவசாயிகள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் போக்குவரத்து நெரிசலால் கடும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பல நேரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கும், உள்ளூா் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இதனால் கொடிவேரி பகுதி மக்கள் குறித்து வெளியூா் மக்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் சூழல் ஏற்படுகிறது.
இதுகுறித்து தடப்பள்ளி- அரக்கன்கோட்டை- பவானி நதி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் சுபி.தளபதி கூறியதாவது: கொடிவேரி தடுப்பணையின் முக்கியத்துவம் கருதி அணையிலிருந்து சத்தியமங்கலம்- ஈரோடு சாலையை இணைக்க புதிய இணைச் சாலை அமைக்க வேண்டும்.
தவிர அணையின் அருகில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலத்தை மீட்டு வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும். இந்த கோரிக்கைகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.