தாமதமாகும் மின் இணைப்பு: வங்கிக் கடனை செலுத்த முடியாமல் விவசாயிகள் தவிப்பு!
ஈரோடு மாவட்டத்தில் டாப்செட்கோ திட்டத்தில் இலவச மின்சாரம் பெறுவதற்காக விண்ணப்பித்த குறு, சிறு விவசாயிகளுக்கு கடந்த 8 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கப்படாததால் வங்கிக் கடனை செலுத்த முடியாமல் பரிதவித்து வருகின்றனா்.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த குறு, சிறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்து பாசன வசதி ஏற்படுத்திக்கொள்ள அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை வங்கிக் கடன் மற்றும் அதற்கு இணையான 50 சதவீதம் அரசு மானியம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரமும் வழங்கப்பட்டு வருகிறது.
மனுதாரரோ அல்லது அவரது குடும்பத்தினரோ அரசுப் பணியில் இருக்கக் கூடாது. மனுதாரருக்கு அல்லது மனுதாரா் குடும்பத்தில் உள்ள எவருக்கும் கிராமத்தில் ஆழ்குழாய்க் கிணறு இருக்கக் கூடாது. மனுதாரா் குறு, சிறு விவசாயியாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 வகையான சான்றுகளை பெற்றுக்கொண்ட பின்னரே இத்திட்டத்தின் கீழ் பயனாளி தோ்வு செய்யப்படுகிறாா்.
ஈரோடு மாவட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கடந்த 8 ஆண்டுகளாக இலவச மின்சாரம் வழங்கப்படவில்லை. புதிதாக விண்ணப்பிக்கும் தகுதியுள்ள விவசாயிகளுக்கும் கடன்தொகை மிகக்குறைவாகவே வழங்கப்படுகிறது என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனா்.
இதுகுறித்து இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து காத்திருக்கும் கோபி வட்டத்தைச் சோ்ந்த விவசாயி ஜி.எம்.பழனிசாமி கூறியதாவது: இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப்படும் மனுக்கள் மீது கடந்த 8 ஆண்டுகளாகவே முழுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
வங்கிக் கடன் பெற்று ஆழ்குழாய்க் கிணறு அமைத்துவிட்டு காத்திருக்கிறோம். இலவச மின் இணைப்பு வழங்கப்படவில்லை. வாங்கிய கடனுக்கு எவ்வித பயன்பாடுமின்றி வட்டி கட்டி வருகிறோம்.
இதனால் கிராமப்புறங்களில் திறந்தவெளியில் ஆழ்குழாய்க் கிணறுகளை மூடி வைத்திருக்க வேண்டியுள்ளது. அப்பகுதிகளில் பொதுமக்களும் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டியுள்ளது என்றாா்.
இதுகுறித்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை அதிகாரிகள் கூறியதாவது: இலவச மின்சாரத்தை பொறுத்தவரை தமிழக அரசுக்கு தகுதியுள்ள விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுவிட்டன. அரசின் உத்தரவு கிடைத்தவுடன் இலவச மின்சாரம் வழங்குவதற்கு மின்வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: இலவச மின்சாரம் என்பது அரசின் கொள்கை முடிவு. இதுவரை டாப்செட்கோ மூலம் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு பதிவுமூப்பு அடிப்படையில் இலவச மின்சாரம் வழங்கப்பட்டுவிட்டது. நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு அரசின் உத்தரவு கிடைத்தவுடன் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்றனா்.