மியான்மரில் புதிய நிலநடுக்கம் ஏற்படும் எனக் கூறிய டிக்டாக் ஜோசியக்காரர் கைது!
மியான்மர் நாட்டில் புதிய நிலநடுக்கம் ஏற்படும் எனக் கூறி விடியோ வெளியிட்ட டிக்டாக் ஜோசியக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மியான்மர் நாட்டில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் லட்சக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரமட்டமானது. மேலும், சுமார் 3,500-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளும் உதவிக்கரம் நீட்டியுள்ள நிலையில் மியான்மர் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தற்போது இயல்புநிலைக்கு திரும்ப முயன்று வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டில் டிக்டாக் செயலி மூலம் தனது ஜோசியக் கணிப்புகளை விடியோவாக வெளியிட்டு வரும் ஜான் மோ (வயது 21) என்ற இளைஞர் கடந்த ஏப்.9 ஆம் தேதி வெளியிட்ட விடியோ அந்நாட்டு மக்களை மீண்டும் பீதியடையச் செய்தது.
அந்த விடியோ பதிவில் அவர் கூறியதாவது:
‘மியான்மரில் ஏப்.21 ஆம் தேதி அன்று புதிய நிலநடுக்கம் ஏற்பட்டு அந்நாட்டிலுள்ள அனைத்து நகரங்களையும் தாக்கும், எனவே நிலஅதிர்வுகள் ஏற்பட்டால் உங்களுக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு உடனடியாக கட்டடங்களை விட்டு வெளியேறுங்கள்’ எனக் கூறியுள்ளார்.
அந்நபரின் டிக்டாக் கணக்கில் வெளியான இந்த விடியோவின் தலைப்பில், பகலில் உயரமான கட்டடங்களில் மக்கள் தங்கக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விடியோ சுமார் 30 லட்சம் பார்வையாளர்களைக் கடந்த நிலையில்; அவரது கணிப்புகளை நம்பி, கடந்த ஏப்.21 ஆம் தேதியன்று யாங்கோன் பகுதியிலுள்ள மக்கள் பலர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி திறந்தவெளிகளில் கூடாரம் அமைத்து தங்கியிருந்தாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், போலியான கருத்துக்கள் மூலம் மக்களிடையே பதற்றத்தை உண்டாகியதாகக் குற்றம்சாட்டி, மத்திய மியான்மரிலுள்ள அவரது வீட்டில் சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர் ஜான் மோவை கைது செய்தனர்.
மேலும், டிக்டாக்கில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அவரைப் பின் தொடர்ந்த நிலையில் தற்போது அவரது கணக்கானது முழுவதுமாக முடக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, டிக்டாக் செயலியில் எதிர்காலத்தில் நடப்பதை முன்கூட்டியே கணிக்கும் விடியோக்கள் மூலம் பிரபலமான ஜான் மோ, அமெரிக்கா மியான்மர் மீது வான்வழித் தாக்குதல் நடத்தும், கைது செய்யப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சன் சூகி விடுதலை செய்யப்படுவார் என்றெல்லாம் கணித்து விடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலியில் டிரம்ப்புக்கு அவமரியாதையா?