புதிய எலைட்புக், புரோபுக், ஆம்னிபுக் மாடல்களை அறிமுகப்படுத்திய ஹெச்பி!
Retro நாயகிகள் 01 : வான்டடாக பஸ்ஸை தவற விட்ட சிறுமி, பின்னாளில்... `அழகிய தமிழ் மகள்’ மஞ்சுளா
தமிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளை, நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளைப் பார்த்திருக்கு. அதுல 70-கள்ல அழகிலும் நடிப்பிலும் ஜொலித்த நாயகிகள் எப்படி சினிமாத்துறைக்கு வந்தாங்க; என்னென்ன சாதிச்சாங்க; அவங்களோட பர்சனல் லைஃப்னு பல விஷயங்களை இந்த `Retro நாயகிகள்’ சீரிஸ் உங்களுக்கு சொல்லப்போகுது.
முதல் நாயகி, போல்ட் அண்ட் பியூட்டிஃபுல் ஆன ஒரு நடிகை.

அந்த சிறுமிக்கு சினிமாவுல நடிக்கணும்னு ரொம்ப ஆசை. அவங்க பார்த்த ஒரு தமிழ்ப்படத்தோட கதாநாயகிக்கு அவங்க பேரு தான் வெச்சிருந்தாங்க. ஹை...இந்த ஹீரோயினுக்கு நம்ம பேரை வெச்சிருக்காங்க பாரேன்னு மனசுக்குள்ள அந்த சிறுமிக்கு எக்கச்சக்க சந்தோஷம். சரி, நாமளும் ஹீரோயினா ஆகிடணும்னு அந்த சிறுமி முடிவெடுத்திடுறா. அதுக்காக என்ன செஞ்சா தெரியுமா?
தினமும் ஸ்கூலுக்கு போகாம, சென்னை எக்மோர் பாந்தியன் ரோட்ல இருக்கிற பஸ் ஸ்டாப்பிங்ல உட்கார்ந்துக்கிட்டு போற வர்ற பஸ்ஸையெல்லாம் வேடிக்கைப்பார்த்துட்டு வீட்டுக்குப் போயிடுவா. 'ஏன் இன்னிக்கு ஸ்கூல்ல இருந்து சீக்கிரமா வந்துட்டே'ன்னு அவங்கம்மா கேட்டா, 'இன்னிக்கு நான் ஷூ பாலிஷ் பண்ணிட்டுப் போகல; இன்னிக்கு நகம் வெட்டாம போயிட்டேன். அதனால, என்னை வீட்டுக்கு அனுப்பிட்டாங்கன்னு தினம் ஒரு காரணம் சொல்ல ஆரம்பிச்சிருக்கா.
ஏதாவது காரணம் சொல்லி ஸ்கூலுக்குப் போகாம இருந்தா, ஸ்கூலை விட்டு நம்மளை நிறுத்திடுவாங்க. அதுக்கப்புறம் நாம நடிகையாகிடலாம்கிறதுதான் அந்த சிறுமியோட திட்டம். அது நல்லாவும் வொர்க் அவுட் ஆச்சு. ஒருநாள் தலைமையாசிரியை கூப்பிட்டு, 'ஸ்கூலுக்கு சரியா வர்றியா; இல்லைன்னா சினிமாவுல நடிக்கப்போறியா. எது வேணும்னு நீ தான் முடிவெடுக்கணும்'னு சொல்லியிருக்கார். இதுக்குதானே இவ்ளோ நாள் காத்துக்கிட்டிருந்தா அந்த சிறுமி. 'நான் நடிக்கப்போறேன்'னு சொல்லிட்டு வீட்டுக்கு வந்துட்டா.
சரி, பொண்ணோட ஆசையை தடுக்க வேணாம்னு முடிவெடுத்துட்ட பெற்றோர், அவங்க குடும்ப நண்பரான இசையமைப்பாளர் கணேஷ் (சங்கர்) கிட்ட விஷயத்தை சொல்றாங்க. அவர் மூலமா, ஜெமினி கணேசன் - காஞ்சனா நடிச்ச 'சாந்தி நிலையம்'கிற படத்துல குழந்தை நட்சத்திரமா நடிக்க வாய்ப்புக் கிடைச்சிது அந்த சிறுமிக்கு. அந்தப் படத்துல நிறைய குழந்தை நட்சத்திரங்கள் நடிச்சிருப்பாங்க. அவங்கள்ல, கண்ணாடி போட்டுக்கிட்டு துறுதுறுன்னு ஒரு பொண்ணு நடிச்சிருக்கும். யெஸ் யெஸ்... அந்த சிறுமி, நடிகை மஞ்சுளாவே தான். இந்தப்படம் 1969-ல வந்துச்சு.

மஞ்சுளாவோட கூடப்பிறந்தவங்க 3 சகோதரர்கள். ஒரு சகோதரி. அம்மா கெளசல்யா குடும்பத்தலைவி. மஞ்சுளா சினிமாவுல நடிக்க ஆரம்பிச்சப்போ, அவங்களோட அப்பா ஜெகன்னாத் நாகலாந்து ராணுவத்தில் மேஜரா இருந்திருக்கார். அப்போ ஆனந்த விகடன்ல வெளிவந்த மஞ்சுளாவோட பேட்டியில இந்தத் தகவலை அவங்களே சொல்லியிருக்காங்க. அதே இன்டர்வியூவுல, நடிக்கிறதுக்காக படிப்பைவிட்ட தான், பின்னாள்ல பனாரஸ் மெட்ரிக் பாஸ் பண்ணதையும் சொல்லியிருக்காங்க.
சாந்தி நிலையத்துக்கு அடுத்து, மஞ்சுளாவே எதிர்பார்க்காத வாய்ப்பு கிடைச்சிருக்கு. விஜயா ஸ்டூடியோவுல போட்டோவுக்கு போஸ் கொடுத்துட்டிருந்தவங்க எம்.ஜி.ஆர். கண்ல பட, அவரோட நடிக்க மஞ்சுளாவுக்கு அஞ்சு வருட ஒப்பந்தம் போடப்படுது. 'ரிக்ஷாக்காரன்' படத்துல ஹீரோயினா அறிமுகமாகுறாங்க மஞ்சுளா. இந்தப்படம் நடிக்கிறப்போ அவங்களோட வயசு ஸ்வீட் சிக்ஸ்டீன்.
'ரிக்ஷாக்காரன்'ல அழகு, நடிப்பு, கிளாமர்னு சமகால நடிகைகளை மஞ்சுளா லைட்டா மிரட்டிட்டாங்கன்னே சொல்லலாம். சாந்தி நிலையத்துக்கும், ரிக்ஷாக்காரனுக்கும் இடையில, தெலுங்குல 'ஜெய் ஜவான்'னு ஒரு படத்துல நடிச்சிருக்கார் மஞ்சுளா. இதுக்காக சிறந்து புது நடிகைக்கான விருதையும் வாங்கியிருக்கார்.

இதுக்கப்புறம் மஞ்சுளாவோட கரியர்ல ஏணிகள்தான் அதிகமா இருந்துச்சுன்னு சொல்லலாம். எம்.ஜி.ஆர்.கூட 'உலகம் சுற்றும் வாலியன்', 'இதய வீணை', 'நேற்று இன்று நாளை', 'நினைத்ததை முடிப்பவன்'...
சிவாஜிகூட 'டாக்டர் சிவா', 'எங்கள் தங்க ராஜா', 'அவன் தான் மனிதன்', 'என் மகன்', 'அன்பே ஆருயிரே', 'மன்னவன் வந்தானடி', 'உத்தமன்', 'அவன் ஒரு சரித்திரம்', 'நெஞ்சங்கள்'னு அடுத்தடுத்த வாய்ப்புகள்.
தவிர, ஏவிஎம் ராஜனுடன் 'அம்மன் அருள்', 'டாக்டரம்மா'... முத்துராமனுடன் 'மறுபிறவி', 'எல்லோரும் நல்லவரே', மு.க.முத்துவுடன் 'பூக்காரி', ஶ்ரீகாந்துடன் 'ராஜ நாகம்', ஜெமினி கணேசனுடன் 'சக்தி லீலை'... தெலுங்கில் டாப் ஹீரோக்களான என்.டி.ஆர்., ஷோபன் பாபு மற்றும் கிருஷ்ணாவுக்கு ஜோடி என, 70-கள்ல தெலுங்கு சினிமாவையும், தமிழ் சினிமாவையும் மஞ்சுளாவோட முக வசீகரமும் கிளாமரும் ரூல் பண்ணுச்சுன்னே சொல்லலாம்.

`மஞ்சு, நான் உங்களைக் கல்யாணம் செஞ்சுக்க விரும்புறேன்’
ரஜினி, கமல், விஜயகுமார் கூடவும் 'நீயா', 'சங்கர் சலீம் சைமன்', 'குப்பத்து ராஜா'ன்னு சில படங்கள்ல நடிச்சிருக்கார் மஞ்சுளா. சினிமாவுல உச்சத்துல இருந்த நேரத்துலதான் மஞ்சுளாவோட வாழ்க்கையில காதல் வந்திருக்கு. 'உன்னிடம் மயங்குகிறேன்' படத்தோட ஷூட்டிங் பிரேக்ல மஞ்சுளாவோட நட்பா பேசிப்பழக ஆரம்பிச்ச விஜயகுமார், ஒருநாள் 'மஞ்சு, நான் உங்களைக் கல்யாணம் செஞ்சுக்க விரும்புறேன். நீங்க என்ன சொல்றீங்க'ன்னு தடாலடியா கேட்டிருக்கார். இந்த நேரத்துல மஞ்சுளா தெலுங்கு சினிமாவுல பிஸியா இருந்திருக்காங்க. விஜயகுமாருக்கோ ஏற்கெனவே கல்யாணமாகி மூணு குழந்தைங்க இருந்திருக்காங்க.
இந்த நிலையில இந்தக் காதலை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு தெரியாம, 'என் அம்மாப்பா கிட்ட கேக்கணும்'னு சொல்லியிருக்காங்க. ஆனா, மஞ்சுளாவுக்குள்ளேயும் காதல் இருந்திருக்கு. அடுத்த சில தினங்கள்ல விஜயகுமார், மஞ்சுளாவோட பெற்றோரை சந்திக்க, அவங்களோ 'எங்க பொண்ணோட விருப்பமே எங்க விருப்பம்'னு பச்சைக்கொடிக் காட்டியிருக்காங்க.
சிம்பிளா கல்யாணத்தை முடிச்சிக்கிட்டு வாழ்க்கையை ஆரம்பிச்சிருக்காங்க. வனிதா, ப்ரீத்தா, ஶ்ரீதேவின்னு மூணு பெண் குழந்தைகள் பிறக்க, குடும்பம், குழந்தைகள்னு பர்சனல் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கிறதை படிப்படியாக குறைக்க ஆரம்பிச்சவங்க, 90-கள்ல அம்மா கேரக்டர்ல நடிக்க ஆரம்பிச்சாங்க.

முரளியுடன் புது வசந்தம், பிரபுவுடன் செந்தமிழ்ப்பாட்டு, கார்த்திக்குடன் அமரன், லக்கி மேன், விஜயகாந்துடன் காவியத்தலைவன், அரவிந்தசாமியுடன் தாலாட்டு, பிரபுதேவாவுடன் நாம் இருவர் நமக்கு இருவர், சரத்குமாருடன் சமுத்திரம், சேரன் பாண்டியன், சுயம்வரம் என தன்னோட செகண்ட் இன்னிங்ஸிலும் ஒரு பெரிய ரவுண்ட் வந்தார் மஞ்சுளா.
நடிகர், நடிகைகள்னாலே அழகுதான். அது அவங்க துறைக்கான அடிப்படை. இதுல, நடிகை மஞ்சுளாவோட அழகுல கூடுதலா ஒரு ஸ்டைலிஷ்னெஸ் இருக்கும். 'ரிக்ஷாக்காரன்'ல மஞ்சுளா ஹீரோயினா அறிமுகமானப்போ இதுதான் மத்தவங்கள்ல இருந்து அவரை வித்தியாசப்படுத்திக் காட்டுச்சு. அவர் அம்மா ரோல்கள்ல நடிச்சப்போ கூட இந்த ஸ்டைலிஷ்னெஸ் இருந்துச்சுன்னு சொல்லலாம். உதாரணத்துக்கு, நாம் இருவர் நமக்கு இருவர், சமுத்திரம், சேரன் பாண்டியன், சுயம்வரம் மாதிரி சில படங்களைப்பார்த்தா தெரியும்.

மஞ்சுளாவுக்கு அமைஞ்ச பாடல்கள்ல பெரும்பாலானவை சூப்பர் டூப்பர் ஹிட்தான். எம்.ஜி.ஆருடன் 'அழகிய தமிழ் மகள் இவள்', முத்துராமனுடன் 'படைத்தானே பிரம்மதேவன்', சிவாஜியுடன் 'மலரே குறிஞ்சி மலரே', 'மல்லிகை முல்லை பூப்பந்தல்', 'அன்பு நடமாடும் கலைக்கூடமே', விஜயகுமாருடன் 'உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை' என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
மஞ்சுளா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 100-க்கும் மேற்பட்ட படங்கள்ல நடிச்சிருக்கிறதா கூகுள் குறிப்பிடுது. மஞ்சுளாவின் இளமைக்கால நடிப்பில் கொஞ்சம் குழந்தைத்தனமும் கலந்திருக்கும். அவர் முகமும் அதையே பிரதிபலிக்கும். ஆனா, அவர் அம்மா ரோல்கள் செஞ்சப்போ சமுத்திரம், சேரன் பாண்டியன் மாதிரி சில படங்கள்ல நடிப்புல மிரட்டியிருப்பார். குறிப்பா 1991-ல வெளிவந்த 'சேரன் பாண்டியன்' கிளைமேக்ஸ் சீன்ல மஞ்சுளா பேசுற நீளமான வசனத்தை 34 வருஷம் கழிச்சு இன்னிக்குக் கேட்டாலும் மனசு டிஸ்டர்ப் ஆகும்; அழுகை வரும். அதுதான் அவங்க நடிப்புக்குக் கிடைச்ச வெற்றி.

நடிகை மஞ்சுளாவை பத்தி நமக்கெல்லாம் நிறைய விஷயங்கள் தெரிஞ்சிருக்கும். ஓர் அம்மாவா தன்னோட பொண்ணுங்க விஷயத்துல அவங்களோட விருப்பம் என்னவா இருந்துச்சுன்னு ஒரு பேட்டியில ப்ரீத்தா ஹரி பேசியிருப்பாங்க. 'எனக்கு 19 வயசிலேயே கல்யாணம் நடந்திடுச்சு. கொஞ்சம் சீக்கிரம்தான். அதுக்கு காரணம் என் அம்மாதான். அவங்களுக்கு பொண்ணுங்க நிறைய படத்துல நடிக்கணும். நம்பர் ஒன் இடத்துக்கு வரணும்கிற ஆசையெல்லாம் கிடையாது. காலநேரத்தோடு பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணி, பேரன் பேத்திகளை பார்க்கணும்னுதான் ஆசைப்பட்டாங்க. அதனாலதான் எங்க எல்லோருக்கும் சீக்கிரமே கல்யாணம் பண்ணி வைச்சாங்க' என்பார் ப்ரீத்தா ஹரி.
நடிகையாகணும்னு ஸ்கூலை கட் அடிச்ச அந்த சிறுமி மஞ்சுளாவுக்கும், பொண்ணுங்க நம்பர் ஒன் ஹீரோயினா வலம் வர வேண்டிய அவசியமில்லைன்னு முடிவெடுத்த அம்மா மஞ்சுளாவுக்கும் இடைப்பட்டதுதான் நடிகை மஞ்சுளாவோட வாழ்க்கை. அவரோட வாழ்க்கையிலேயும் சரி, மரணத்துலேயும் சரி பலவிதமான கருத்துகள் இருந்தாலும், மஞ்சுளா அன்னிக்கும் இன்னிக்கும் என்னிக்கும் அழகிய தமிழ் மகள்தான்!