பந்துவீச்சில் அசத்திய ஹர்ஷல் படேல்; 154 ரன்களுக்கு ஆட்டமிழந்த சிஎஸ்கே!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சிஎஸ்கே முதலில் பேட் செய்தது.
இதையும் படிக்க: சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக பாட் கம்மின்ஸ் பேசியதென்ன?
ஹர்ஷல் படேல் அபாரம்; 155 ரன்கள் இலக்கு
முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.5 ஓவர்களில் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிஎஸ்கேவுக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. சேக் ரஷீத் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். சாம் கரண் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அறிமுகப் போட்டியில் அதிரடியாக விளையாடிய ஆயுஷ் மாத்ரே இன்றும் அதிரடியாக விளையாடினார். அவர் 19 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும்.
ரவீந்திர ஜடேஜா 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய டிவால்ட் பிரேவிஸ் 25 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அதன் பின் களமிறங்கிய வீரர்களில் ஷிவம் துபே (12 ரன்கள்), எம்.எஸ்.தோனி (6 ரன்கள்), அன்ஷுல் கம்போஜ் (2 ரன்கள்), தீபக் ஹூடா (22 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தரப்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் ஜெயதேவ் உனத்கட் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது ஷமி மற்றும் கமிந்து மெண்டிஸ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: 400-ஆவது டி20 போட்டியில் எம்.எஸ்.தோனி!
155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களமிறங்குகிறது.