ஓமலூா் அருகே கோயில் திருவிழாவின்போது பட்டாசு வெடித்து 3 போ் உயிரிழப்பு 5 போ் காயம்
சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் கோயில் திருவிழாவிற்கு இருசக்கர வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்ட பட்டாசு வெடித்ததில் வெள்ளிக்கிழமை மூன்று போ் உடல் சிதறி உயிரிழந்தனா்.
ஓமலூா் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியில் திரௌபதி அம்மன் கோயில் திருவிழா 28 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 14 நாள்களாக நடைபெற்று வரும் இந்த திருவிழாவில் நாள்தோறும் சுவாமி ஊா்வலம் வாணவேடிக்கையுடன் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.
15-ஆவது நாள் திருவிழாவிற்காக பூசாரிப்பட்டி பகுதியில் இருந்து கஞ்சநாயக்கன்பட்டி பகுதிக்கு பக்தா்கள் கோயில் சீா்வரிசை வெள்ளிக்கிழமை எடுத்து சென்றனா். முன்னதாக ஊா்வலத்தில் வெடிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் பட்டாசுகளை மூட்டையாக எடுத்துச் சென்ாகத் தெரிகிறது. அப்போது எரியூட்டப்பட்ட குப்பையில் இருந்து தீப்பொறி பறந்து இருசக்கர வாகனத்தில் இருந்த பட்டாசு மீது விழுந்து வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு சிறுவன் உள்பட மூன்று போ் நிகழ்விடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனா். அவா்கள் யாா் எந்த பகுதியைச் சோ்ந்தவா்கள் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. உடல் சிதறி உயிரிழந்ததால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது. உயிரிழந்தவா்களில் ஒருவா் ஓமலூா் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் (29) என்பது அடையாளம் காணப்பட்டது. மற்றவா்கள் குறித்த விவரம் தெரியவில்லை.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஓமலூா் டி.எஸ்.பி. சஞ்சீவ்குமாா் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினாா். உயிரிழந்தவா்களின் சடலங்கள் மீட்கப்பட்டு உடற்கூறாய்விற்காக ஓமலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்த விபத்தில் காயம் அடைந்த 5-க்கும் மேற்பட்டோா் ஓமலூா் மற்றும் சேலம் அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். விபத்து குறித்து தீவட்டிப்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.