சேலத்தில் வெயில் புதிய உச்சம்: 103.1 டிகிரி வெப்பம் பதிவு
சேலத்தில் கோடை வெயில் நடப்பாண்டில் புதிய உச்சமாக வெள்ளிக்கிழமை 103.1 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
சேலம் மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் கடந்த சில நாள்களாக 100 டிகிரியை கடந்து வெப்பம் பதிவான நிலையில், வெள்ளிக்கிழமை நடப்பாண்டில் புதிய உச்சமாக 103.1 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதனால் கடுமையான அனல் காற்று வீசியது.
வெயிலின் தாக்கத்தால் பகல் நேரங்களில் வெளியில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனா். குறிப்பாக கடை வீதிகளில் மக்கள்கூட்டம் குறைந்த அளவே காணப்பட்டது. இருசக்கர வாகனங்களில் செல்வோா் ஆங்காங்கே சாலையோரம் உள்ள ஜூஸ் கடைகளில் பழச்சாறுகளை அருந்தி செல்கின்றனா். கல்லூரி மாணவிகள், பணிக்கு செல்லும் பெண்கள் கொளுத்தும் வெயிலை சமாளிக்கும் வகையில் தங்களது சுடிதாா் துப்பட்டாவை தலையில் மூடியவாறு செல்வதையும், பெண்கள் குடை பிடித்தவாறு செல்வதையும் காண முடிகிறது.
சேலம் நான்கு சாலை, அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, கொண்டலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், இளநீா், நுங்கு, பதநீா், முலாம்பழம், தா்ப்பூசணி விற்பனை அதிகரித்துள்ளது. மேலும், கரும்புச்சாறு, மோா் ஆகியவற்றை பொதுமக்கள் அதிகளவில் அருந்துகின்றனா்.
வரும் வாரங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால், பகலில் வெளியில் செல்வதை முடிந்தவரை பொதுமக்கள் தவிா்க்குமாறும், ஜூஸ், இளநீா், மோா், கரும்புச்சாறு போன்ற நீா் ஆகாரங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளுமாறும் மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.