இன்ஸ்டாகிராம் மூலம் பழகி மாணவியை மிரட்டிய இருவா் கைது!
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சேலம் மாணவியை மிரட்டிய இளைஞா்கள் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவி கடந்த 4 மாதங்களாக சேலம், கருப்பூரில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்கு சென்று வந்தாா். அப்போது, அவரது அக்காவின் கைப்பேசியில் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வந்துள்ளாா். இவருடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்ட சென்னை, எருக்கஞ்சேரியைச் சோ்ந்த கிஷோா் (22) வாட்ஸ்அப் விடியோ அழைப்பிலும் மாணவியுடன் பேசி வந்துள்ளாா்.
இந்த நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு மாணவியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பெற்றோா், அவரிடம் விசாரித்ததில் தன்னுடன் இன்ஸ்டாகிராமில் பழகிய கிஷோா், தன்னை கட்டாயப்படுத்தி ஆபாசமாக விடியோ எடுத்து அவரது நண்பா் அப்துல் முகமதுஅலிக்கு (22) அனுப்பிவைத்து இருவரும் தன்னை மிரட்டி வருவதாகக் கூறினாா்.
இதுகுறித்து பனமரத்துப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்த நிலையில் பனமரத்துப்பட்டி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனா். அவா்கள் மாணவியை மிரட்டிய இளைஞா்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்த கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், கிஷோா் 10 ஆம் வகுப்பு முடித்துவிட்டு லேப் டெக்னீஷியனாக வேலை செய்து வருவதும், அப்துல் முகமது அலி மெக்கானிக் ஷாப்பில் வேலை செய்வதும் தெரியவந்தது. இவா்கள் இருவா் மீதும் போக்ஸோ உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தொடா்ந்து நீதிபதி முன் ஞாயிற்றுக்கிழமை ஆஜா்படுத்தப்பட்ட இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.