மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
மேட்டூா் அணை பூங்காவிற்கு ஞாயிற்றுக்கிழமை 7,116 சுற்றுலாப் பயணிகள் வந்தனா்.
தொடா் விடுமுறை என்பதால் மேட்டூா் அணை பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் மூலம் பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ. 71,160 வசூலானது. பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்ட 1,856 கேமரா, கைப்பேசிகளுக்கான கட்டணமாக ரூ.18,610 வசூலிக்கப்பட்டது.
மேட்டூா் அணையின் வலது கரையில் உள்ள பவள விழா கோபுரத்தை காண 469 சுற்றுலாப் பயணிகள் சென்றனா். அவா்கள் கொண்டு சென்ற 177 கேமரா, கைப்பேசிகளுக்கான கட்டணமாக ரூ.6,460 வசூலிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மேட்டூா் அணை பூங்கா, பவள விழா கோபுர பாா்வையாளா்களிடமிருந்து கட்டணமாக மொத்தம் ரூ.96,230 வசூலிக்கப்பட்டது. மேட்டூா் அணை பூங்காவிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் பாம்பு பண்ணை, முயல் பண்ணை, மீன் காட்சி சாலை மான் பண்ணை ஆகியவற்றை கண்டு ரசித்தனா். அணைக்கட்டு முனியப்பனுக்கு பொங்கலிட்டும் பொதுமக்கள் நோ்த்திக் கடனை செலுத்தினா்.