Titanic: மூழ்கும் முன் டைட்டானிக் குறித்து எழுதப்பட்ட கடிதம் ரூ.3 கோடிக்கு ஏலம்; எப்படி கிடைத்தது?
டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு முன்பு எழுதப்பட்ட கடிதம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் சுமார் 3 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட சொகுசு கப்பல் என்றாலே "டைட்டானிக் கப்பல்" தான் நினைவிற்கு வரும். 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்திலிருந்து நியூயார்க் துறைமுகத்திற்கு சென்ற டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்திலேயே பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இந்த விபத்து உலக அளவில் பெரிய விபத்தாக பார்க்கப்படுகிறது. இதில் கிட்டத்தட்ட 1500-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்த கப்பல் குறித்து அனைவரும் அறிவதற்கு மிக முக்கிய காரணம் இந்த ”கப்பல் விபத்து” குறித்து ஹாலிவுட் படம் ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது.

டைட்டானிக் கப்பல் அல்லது அதன் எஞ்சிய பாகங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இதிலிருந்து கிடைக்கும் பொருள்கள் அவ்வப்போது ஏலத்தில் விடப்படுகின்றன..
அந்த வகையில் டைட்டானிக் கப்பலில் பயணித்த கர்னல் ஆர்ச்சிபால்ட் கிரேசி என்பவர் எழுதிய கடிதம் ஏலம் விடப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில் ”பயணம் நிறைவு செய்த பிறகே சிறந்த கப்பல்” என்று தீர்ப்பு வழங்க முடியும் என்று எழுதியுள்ளதாகத் தெரிகிறது. இந்த கடிதம் ஒரு தீர்க்க தரிசனமாக பார்க்கப்படுகிறது.
கிரேசி இந்த பேரழிவில் இருந்து தப்பியபோதிலும், அவருக்கு ஏற்பட்ட உடல் காயங்கள் காரணமாக முழுமையாக குணமடையவில்லை. கோமாவில் இருந்து, பிறகு நீரிழிவு தொடர்பான நோயால் காலமானார்.
இந்த கடிதம் எப்படி கிடைத்தது?
கிரேசி ஏப்ரல் 10, 1912 அன்று சவுத்தாம்ப்டனில் டைட்டானிக் கப்பலில் ஏறியிருக்கிறார். கப்பலின் கேபின் C51 -லிருந்து இந்த கடிதத்தை எழுதியிருக்கிறார்.ஏப்ரல் 11 அன்று கப்பல் அயர்லாந்தின் குயின்ஸ்டவுனில் ஒரு சிறிய நிறுத்தத்தை மேற்கொண்டிருக்கிறது. அங்குதான் கடிதம் தபால் மூலம் அனுப்பப்பட்டது. கிரேசி அந்தக் கடிதத்தை லண்டனில் உள்ள வால்டோர்ஃப் ஹோட்டலில் ஒரு அறிமுகமானவருக்கு அனுப்பியிருந்தார், அவர் அதை பெற்றிருக்கிறார்.

டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு முன்பு எழுதப்பட்ட கடிதம் என்பதால் இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் சுமார் மூன்று கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் சுமார் £60,000 (ரூ.68 லட்சம்) விலைக்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதியில் அதை விட ஐந்து மடங்கு அதிக விலைக்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.