"கிராமத்தில் வாழ்க்கை; படப்பிடிப்புக்கு மட்டும் மும்பை" - நடிகர் நானா படேகர் ஓப்பன் டாக்
பாலிவுட் நடிகர் நானா படேகர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருக்கிறார். 72 கோடிக்குச் சொத்துக்கள் இருக்கின்றன.
ஆனால் இவ்வளவு சொத்துக்கள் இருந்தும் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார். புனே அருகில் கடக்வாஸ்லா என்ற இடத்தில் மலையடி வாரத்தில் 25 ஏக்கர் பண்ணை வீட்டில் வாழ்க்கையை வாழ்கிறார். தனது தோட்டத்தில் விவசாயம் செய்துகொண்டிருக்கிறார்.
கிராமத்து வாழ்க்கை குறித்து நானா படேகர் நடிகர் அமிதாப் பச்சனுடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நானாபடேகர் இது குறித்து கூறுகையில், ''நான் கிராமத்தைச் சேர்ந்தவன். வேலைக்காக மட்டுமே மும்பைக்குச் செல்கிறேன்.
மும்பையில் படப்பிடிப்புகளில் கலந்து கொண்ட பிறகு மீண்டும் கிராமத்திற்குச் சென்று விடுகிறேன். அது எனக்கு மிகவும் வசதியாக இருக்கிறது'' என்று தெரிவித்தார்.

கிராமத்தில் உங்களது அன்றாட பணிகள் என்னவென்று அமிதாப்பச்சன் கேட்டதற்கு, ''காலையில் எழுந்தவுடன் நானே உருவாக்கிய உடற்பயிற்சி கூடத்தில் சிறிது நேரம் உடற்பயிற்சி எடுக்கிறேன். எனக்குத் தேவையானதை நானே செய்கிறேன்.
காலை உணவு, மதிய உணவு உட்பட அனைத்து உணவுகளையும் நானே சமைக்கிறேன். நான் சினிமாவிற்கு வராமல் இருந்திருந்தால் சிறிய அளவில் ஹோட்டல் தொடங்கி இருப்பேன். ஆனால் நாம் எதிர்பார்ப்பதை விட வாழ்க்கை நமக்கு அதிகமாகவே கொடுக்கிறது.
எனக்கு எளிமையான வாழ்க்கை தேவைப்படுகிறது. மாலை நேரத்தில் புத்தகம் வாசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். நான்கு ஷெல்ப் நிறையப் புத்தகங்கள் இருக்கின்றன. நகரத்தில் நான்கு சுவருக்குள் வாழ்வோம். ஆனால் கிராமத்தில் நான் மலையில் வசிக்கிறேன்.
காலையில் எழும்ப அலாரம் வைக்க வேண்டிய அவசியமே இல்லை. பறவைகள் என்னை எழுப்பி விடுகின்றன. சில நேரங்களில் மயில்கள் எங்களது வீட்டிற்கு வருகின்றன.
எனது கிராமத்திற்கு வந்து ஒரு வாரம் நீங்கள் தங்குங்கள். மிகவும் அமைதியாக இருக்கும்" என்று அமிதாப்பச்சனிடம் தெரிவித்தார். உடனே அமிதாப்பச்சன், "எப்போதாவது உங்களது கிராமத்து வீட்டிற்கு வருவேன்'' என்றார்.
உடனே, "நிச்சயம் வாருங்கள். நான் எப்போதும் எனது நண்பர்களிடம் இந்த வீடு எனக்கு மட்டுமானது கிடையாது. இது உங்களுக்கானது. எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் கூறுவேன்'' என்று தெரிவித்தார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...