ரிஷப் பந்துக்கு ரூ. 24 லட்சம் அபராதம்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் முதலில் மும்பை அணி பேட்டிங் செய்தது. இந்தப் போட்டியில் மும்பை அணி 215 ரன்கள் எடுத்த நிலையில், சேஸிங் செய்த லக்னெள 20 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில், முதலில் பந்துவீசிய லக்னெள அணி அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.22ன் படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது இரண்டாவது முறை என்பதால் ரிஷப் பந்துக்கு ரூ. 24 லட்சமும், இம்பேக்ட் வீரர் உள்பட அணியின் மற்ற வீரர்களுக்கு ரூ. 6 லட்சம் அல்லது போட்டி சம்பளத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, ஏப்ரல் 4 ஆம் தேதி மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்துவீசியதற்காக லக்னெள அணியின் கேப்டன் பந்துக்கு ரூ. 12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.
மேலும், இந்த சீசனில் மூன்றாவது முறையாக லக்னெள அணி மெதுவாக பந்துவீசும் பட்சத்தில் ரிஷப் பந்துக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்படும்.
ஏற்கெனவே இந்த சீசனில் ராஜஸ்தான் அணி இரண்டு முறை மெதுவாக பந்துவீசி இருப்பது குறிப்பிடத்தக்கது.