போர்ப் பதற்றம்: புதிதாக 26 ரஃபேல் வாங்கும் ஒப்பந்தம் இன்று கையெழுத்து!
போர்ப் பதற்றத்துக்கு மத்தியில் புதிதாக 26 ரஃபேல் போா் விமானங்களை பிரான்ஸ் அரசிடம் கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகவுள்ளது.
இந்திய விமானப்படையின் அம்பாலா மற்றும் ஹஷிமாராவில் உள்ள தளங்களில் 36 ரஃபேல் ஜெட் விமானங்களை இயக்கப்பட்டு வருகின்றது.
ரூ. 63,000 கோடி மதிப்பில் புதிதாக 26 ரஃபேல் விமானங்கள் கடற்படைக்காக வாங்குவதற்கு மத்திய பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவை இம்மாத தொடக்கத்தில் ஒப்புதல் அளித்தது.
இந்த நிலையில், தில்லி பாதுகாப்புத் துறை அமைச்சக வளாகத்தில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதரும் மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங்கும் இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர்.
இந்த நிகழ்வில், பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் செபாஸ்டியன் லெகோர்னு கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களால் பயணம் ரத்து செய்யப்பட்டது.
தற்போது கொள்முதல் செய்யப்படவுள்ள 26 ரஃபேல் கடற்படை போர் விமானங்கள் இந்திய கடற்படைக்கு வழங்கப்படவுள்ளன. முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் போா்க் கப்பலில் இருந்து 26 விமானங்களும் இயக்கப்படவுள்ளன.
22 ஒற்றை இருக்கை ரஃபேல் கடற்படை விமானங்கள் மற்றும் 4 இரண்டு இருக்கை ரஃபேல் கடற்படை விமானங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. இதில், 10 விமானங்கள் நடுவானில் எரிபொருளை நிரப்பும் வசதியுடன் வடிவமைக்கப்படவுள்ளன.
ஒப்பந்தம் செய்யப்பட்ட தேதியில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவிடம் 26 விமானங்களும் ஒப்படைக்கப்படும்.