கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கு: தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்!
கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கடந்த 2003-ல் குப்பநத்தம் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகே உள்ள குப்பநத்தம் முந்திரிக்காடு பகுதியில் காதில் விஷம் ஊற்றிக் கொல்லப்பட்ட முருகேசன் - கண்ணகி ஆணவக் கொலை வழக்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு கடலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியனுக்கு தூக்கு தண்டனையும் கண்ணகியின் தந்தை உள்ளிட்ட 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மேலும் 12 பேரின் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து தண்டனை பெற்ற கந்தவேல், ஜோதி, மணி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அதன்படி, கண்ணகியின் அண்ணன், தந்தை உள்பட 13 பேரின் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.