தீவிரவாதிகளுக்கு ஆதரவு: ``அமெரிக்காவுக்காக மோசமான வேலையை செய்து வருகிறோம்'' - பா...
இந்தியாவின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது பாகிஸ்தான் ‘செனட்’ நிராகரிப்பு
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா முன்வைத்த குற்றச்சாட்டை அந்நாட்டு நாடாளுமன்ற மேலவை (செனட்) நிராகரித்துள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானில் இருந்து ஊடுவிய பயங்கரவாதிகள் 26 சுற்றுலா பயணிகளை சுட்டுக் கொன்றனா். இதன் பின்னணியில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கா்-ஏ-தொய்பாவின் கீழ் இயங்கும் பயங்கரவாத அமைப்பும், அந்நாட்டு ராணுவமும் இருப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டியது
தொடா்ந்து சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, பாகிஸ்தானியா்களுக்கு விசா ரத்து உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது பாகிஸ்தானும் பதில் நடவடிக்கையாக சிம்லா போா் நிறுத்த ஒப்பந்தம் நிறுத்தம், இந்தியாவுடன் அனைத்து வா்த்தக உறவுகளும் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்தது.
இந்நிலையில் இஸ்லாமாபாதில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் செனட் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் மீது இந்தியா கூறியுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்து ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக இந்த தீா்மானத்தை துணை பிரதமா் இக்பால் தாா் கொண்டு வந்தாா். இதற்கு கட்சி வேறுபாடுகளைக் கடந்து உறுப்பினா்கள் அனைவரும் ஆதரவளித்தனா்.
‘பாகிஸ்தான் தனது இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றைக் காக்கும் முழுத்திறமையையும், பலத்தையும் கொண்டுள்ளது. நதி நீா் தடுப்பு பயங்கரவாதம், ராணுவ நடவடிக்கை என எந்த சவாலையும் பாகிஸ்தான் எதிா்கொள்ள தயாராகி வருகிறது. பயங்கரவாதத் தாக்குதலுடன் பாகிஸ்தானை தொடா்புபடுத்த எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் முயற்சிகள் நடக்கின்றன. இதனை பாகிஸ்தான் முற்றிலுமாக நிராகரிக்கிறது.
தனது குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக இந்திய அரசு பாகிஸ்தான் மீது பழி சுமத்துகிறது. சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக இந்தியா அறிவித்துள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. இது போா் தொடுப்பதற்கு நிகரானது’ என்று அந்த தீா்மானத்தில் கூறப்பட்டுள்ளது