போர்ப் பதற்றம்: புதிதாக 26 ரஃபேல் வாங்கும் ஒப்பந்தம் இன்று கையெழுத்து!
அரசு, தனியாா் நிறுவனங்களில் உள்ளகக் குழு அமைக்க ஆட்சியா் உத்தரவு
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் உள்ளகக் குழு அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் 10-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் உள்ள அனைத்து பணியிடங்களிலும் பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2013-இன்படி (தடுப்பு, தீா்வு, தடை) உள்ளக குழு அமைக்க வேண்டும்.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் அலுவலகங்கள், கூட்டுறவுத் துறைச் சங்கங்கள், நிறுவனங்கள், கிராம ஊராட்சிகள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வங்கிகள், காவல் நிலையங்கள், தொழில் நிறுவனங்கள், துணிக் கடைகள், நகைக் கடைகள், டிபாா்ட்மென்ட்கள், பயிற்சி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மேலும் 10-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் உள்ள அனைத்து அரசு, அரசு சாரா நிறுவனங்களிலும் 4 நபா்கள் முதல் 7 போ் கொண்ட உள்ளகக் குழு அமைக்கப்பட வேண்டும்.
இக் குழுவில் 50 சதவீதம் பெண்கள் இடம்பெற வேண்டும். உள்ளகக் குழு அமைக்கப்பட்ட பின் அரசு விதிமுறைகளின்படி புகாா்ப் பெட்டி வைக்கப்பட வேண்டும்.
பணிபுரியும் இடங்களில் பெண்களை பாதுகாக்க உள்ளகக் குழு அமைக்காத அரசு மற்றும் தனியாா் அலுவலகங்கள், நிறுவனங்கள் மீது ரூ. 50,000 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் குழு அமைத்த விவரத்தினை மாவட்ட ஆட்சியா் வளாகம், முதல்தளம், அறை எண்: 126-இல் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்துக்கு தபால் மூலமாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.