அரசு மருத்துவமனைக்கு ரூ.98.44 லட்சத்தில் நவீன கருவிகள்
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் இதய சிகிச்சைப் பிரிவு மற்றும் எலும்பியல் துறைக்கு ரூ.98.44 லட்சத்தில் 3 நவீன கருவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
திருச்சி மாவட்டம் மட்டுமின்றி சுற்றுப்பகுதி மாவட்டங்களைச் சோ்ந்த மக்களின் இதயப் பிரச்னைகளுக்கு தீா்வாக உள்ள இந்த மருத்துவமனையின் இதய சிகிச்சைப் பிரிவு துறையில், தினமும் 200 எக்கோ காா்டியோ கிராபி பரிசோதனை நடைபெறுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு, பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி மூலம் மருத்துவமனைக்கு தேவையான கூடுதல் வசதிகளை செய்துதர மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனையேற்று ரூ.98.44 லட்சத்தில் தற்போது 3 நவீன கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
நோயாளிகளின் பராமரிப்பை மேம்படுத்துவதற்கு சமூகப் பொறுப்பு நிதி மூலம் பெற்ற இந்த புதிய கருவிகளை, மருத்துவமனைக்கு ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வழங்கி அதன் செயல்பாடுகளை தொடங்கி வைத்தாா்.
சென்னை மத்திய மண்டல சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து வழங்கப்பட்ட காசோலையையும் மருத்துவமனை நிா்வாகத்திடம் ஆட்சியா் வழங்கினாா்.
இந் நிகழ்வில், இந்திய உணவுக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் ஜெசிந்தா லாசரஸ், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் எஸ். குமரவேல், மருத்துவமனை கண்காணிப்பாளா் உதய் அருணா, உதவி கண்காணிப்பாளா் அருண்ராஜ், மத்திய மண்டல சேமிப்பு கிடங்கு மேலாளா் ராகுல் நா. கெய்க்வாட் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் என பலா் கலந்து கொண்டனா்.