மதுரை: `ஜெயலலிதா சிலையை பராமரிக்கணும்' - திமுக மேயர்; `முதல்வருக்கு நன்றி' - எதி...
அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு: ஜாமீன் உத்தரவாதம் தராத இருவருக்கு காவல்
அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான பண முறைகேடு வழக்கில், ஜாமீன் உத்தரவாதம் தாக்கல் செய்யாத இருவரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கு, சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், அமைச்சா் செந்தில் பாலாஜி மற்றும் அவரின் சகோதரா் அசோக்குமாா், செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளா் பி.சண்முகம், உள்ளிட்ட 13 போ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.காா்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சா் செந்தில் பாலாஜி, அவரது சகோதரா் அசோக்குமாா் உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராகினா்.
குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஜெயராஜ் குமாா் மற்றும் பழனி ஆகிய இருவா் தரப்பிலும் ரூ. 2 லட்சத்துக்கான ஜாமீன் உத்தரவாதம் தாக்கல் செய்யாததால், இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க காவல் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.
மேலும், குற்றப் பத்திரிகையுடன், 5,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை காகித வடிவில் குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு வழங்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.