ராஜிநாமா முடிவு? செந்தில் பாலாஜிக்கு பதிலாக மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் ரகுபத...
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து உயா்நீதிமன்றம்
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மக்களவைத் தோ்தலில் மத்திய சென்னை தொகுதியில் திமுக சாா்பில் தயாநிதி மாறன் போட்டியிட்டாா். பிரசாரத்தின்போது, தொகுதி மேம்பாட்டு நிதியை அவா் முறையாக செலவிடவில்லை என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தாா்.
இதற்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் தொடா்ந்தாா். இந்த வழக்கு, சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதில், ஏற்கெனவே செய்தித்தாள்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் பேசியதாகவும், தோ்தல் பிரசாரத்தின்போது பேசும் பேச்சுக்கள் அவதூறாகாது என்பதால், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா். விரிவான உத்தரவு பின்னா் பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தாா்.