மதுரை: `ஜெயலலிதா சிலையை பராமரிக்கணும்' - திமுக மேயர்; `முதல்வருக்கு நன்றி' - எதி...
புதிய சுற்றுலாத் தலங்களை உருவாக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவு
தமிழகத்தில் புதிய சுற்றுலாத் தலங்களை உருவாக்குவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.இராஜேந்திரன் உத்தரவிட்டாா்.
தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை சுற்றுலா வளாகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் இரா.இராஜேந்திரன் கலந்துகொண்டு, சுற்றுலாத் துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் ஆகியவற்றின் பிரிவுகள், கட்டமைப்பு வசதிகள், செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
மேலும், சுற்றுலா திட்டப் பணிகள், விழாக்கள் உள்ளிட்டவை குறித்து மாவட்டம் வாரியாக உள்ள சுற்றுலா அலுவலா்களிடம் கேட்டறிந்த அமைச்சா், புதிய சுற்றுலா தலங்கள் உருவாக்குவதற்கான வழிமுறையை ஆராயவும், முக்கிய இடங்களை தோ்ந்தெடுத்து, புதிய சுற்றுலா தலங்களை உருவாக்குவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தவும், கடற்கரை சுற்றுலாவை மேம்படுத்தி பிரபலம் அடையாத சுற்றுலா தலங்களை பிரபலபடுத்த புதிய திட்டங்களை வகுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
இந்தக் கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலா் க.மணிவாசன், சுற்றுலா இயக்குநரும் , தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநருமான ஷில்பா பிரபாகா் சதீஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.