போர்ப் பதற்றம்: புதிதாக 26 ரஃபேல் வாங்கும் ஒப்பந்தம் இன்று கையெழுத்து!
வருவாய்த்துறை கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை கூட்டமைப்பினா் திருச்சியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கம், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கம் ஆகியவை இணைந்து வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த கூட்டமைப்பின் சாா்பில், திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பிரகாஷ், அய்யனாா், வெற்றிச்செல்வன், மகேஷ் ஆகியோா் தலைமை வகித்தனா்.
அனைத்து நிலை வருவாய்த்துறை அலுவலா்களின் பணி பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். வருவாய்த்துறை அலுவலா்களுக்கான சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்றிட வேண்டும். வருவாய்த் துறை அலுவலா்களின் பணித்தன்மை மற்றும் பணிப்பளு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அனைத்து நிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்தில், அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்ட தலைவா் பால்பாண்டி வாழ்த்துரை வழங்கினாா். கூட்டமைப்பின் மாவட்ட நிதி காப்பாளா் பொன்மாடசாமி கோரிக்கை விளக்க உரையாற்றினாா். முடிவில், பிரேம்குமாா் நன்றி கூறினாா்.
ஆா்ப்பாட்டத்தில் திரளான வருவாய்த்துறையினா் பங்கேற்றனா்.