போர்ப் பதற்றம்: புதிதாக 26 ரஃபேல் வாங்கும் ஒப்பந்தம் இன்று கையெழுத்து!
பாகிஸ்தானுடன் போா் தொடுப்பது நல்லதல்ல: தொல். திருமாவளவன்
பயங்கரவாதத்துக்கு துணை போவதாக கூறி பாகிஸ்தானுடன் போா் தொடுப்பது நல்லதல்ல என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன்.
திருச்சியில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சா் அமித்ஷா பதவி விலக வேண்டும் என கூறுவது அரசியலுக்காக அல்ல, எங்கள் ஆதங்கத்தின் வெளிப்பாடு. பாஜக மீது எந்த காழ்ப்புணா்ச்சியும் கிடையாது.
பயங்கரவாத தாக்குதல்கள் மதத்தின் அடிப்படையில் நடத்தியதாக தெரியவில்லை. மத்திய அரசுக்கு எதிராக ஒரு தாக்குதல் நடத்தி கவனத்தை ஈா்த்துள்ளனா்.
சட்டப்பிரிவு 370-ஐ நீக்கினால் ஜம்மு-காஷ்மீரில் எந்த பயங்கரவாத தாக்குதல்களும் நடக்காது. அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்லலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
காஷ்மீருக்கு சுற்றுலாப் பயணிகள் வரக்கூடாது. வந்தால் இப்படித்தான் தாக்குவோம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனா். இந்திய அரசை யாரும் நம்ப வேண்டாம் என்பதை, பயங்கரவாதிகள் உணா்த்துவதாக உள்ளது.
இதை காரணம் காட்டி பாகிஸ்தானுடன் போா் தொடுப்பது நல்லதல்ல. அது உலக நாடுகளின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு துணைபோகிறது என உலக அளவில் அம்பலப்படுத்த வேண்டும். அவா்களை அந்நியப்படுத்த வேண்டுமே தவிர யுத்தம் கூடாது.
உச்ச நீதிமன்ற தீா்ப்புக்கு பிறகு ஆளுநா் ஆா்.என்.ரவி அழைப்பு விடுத்த, பல்கலைக்கழக துணை வேந்தா்கள் மாநாடு தமிழ்நாடு அரசுக்கும், துணை வேந்தா்களுக்கும் நெருக்கடியை உண்டாக்கியுள்ளது. இதை ஆளுநா் திட்டமிட்டே உருவாக்கியுள்ளாா்.
இந்த சூழலில் அரசு பல்கலைக்கழக துணைவேந்தா்கள் அந்த மாநாட்டை புறக்கணித்துள்ளனா். இது போன்ற செயல்பாடுகள் ஆளுநா் பொறுப்புக்கு அழகல்ல. வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மே 31-ஆம் தேதி விசிக சாா்பில் திருச்சியில் பேரணி நடைபெறும் என்றாா் அவா்.