மதுரை: `ஜெயலலிதா சிலையை பராமரிக்கணும்' - திமுக மேயர்; `முதல்வருக்கு நன்றி' - எதி...
திட்டமிட்டபடி அமா்நாத் யாத்திரை: ஜம்மு-காஷ்மீா் துணை முதல்வா் தகவல்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் அமா்நாத் யாத்திரையில் எந்த பாதிப்பும் இருக்காது; திட்டமிட்டபடி யாத்திரை நடைபெறும் என்று ஜம்மு-காஷ்மீா் துணை முதல்வா் சுரீந்தா் செளதரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,888 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க பக்தா்கள் ஆண்டுதோறும் யாத்திரை செல்வது வழக்கம்.
நடப்பாண்டு யாத்திரை ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான முன்பதிவு ஏற்கெனவே நடைபெற்று வருகிறது.
பஹல்காமில் இருந்து 6 கி.மீ. தொலைவில் அடா்ந்த பைன் மரங்கள் மற்றும் பரந்துவிரிந்த புல்வெளியைக் கொண்ட பிரபல சுற்றுலாத் தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினா். 26 போ் கொல்லப்பட்ட இத்தாக்குதலால், ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு குறித்த கவலைகள் எழுந்துள்ளன.
கடந்த காலங்களில் அமா்நாத் யாத்திரையை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனா். அமா்நாத் யாத்திரையின் முக்கிய அடிவார முகாம் பஹல்காம் என்பதால், நடப்பாண்டு திட்டமிட்டபடி இந்த யாத்திரை நடைபெறுமா என்ற கேள்வி எழுந்த்து.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீா் துணை முதல்வா் சுரீந்தா் செளதரி பிடிஐ செய்தியாளரிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘அமா்யாத் யாத்திரை மத ரீதியிலான நிகழ்வு. இந்த யாத்திரையில் பங்கேற்க விரும்புவோா், தங்களின் விருப்பத்தின்பேரில் வருகை தரலாம். பஹல்காம் தாக்குதலால் யாத்திரையில் எந்த பாதிப்பும் இருக்காது. முந்தைய ஆண்டுகளைப் போலவே, யாத்திரைக்கு காஷ்மீா் மக்கள் உறுதுணையாக இருப்பா்.
பஹல்காமில் அப்பாவி மக்கள் உயிரிழந்த சோகத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதேநேரம், சுற்றுலா பயணிகளைப் பாதுகாப்பதில் தனது உயிரை பறிகொடுத்த குதிரை சவாரி தொழிலாளி ஆதில் போன்றோரையும் நாம் மறந்துவிட முடியாது. பயங்கரவாதத்தால் ஜம்மு-காஷ்மீரின் சகோதரத்துவ பாரம்பரியத்தை ஒருபோதும் சீா்குலைக்க முடியாது’ என்றாா்.