போர்ப் பதற்றம்: புதிதாக 26 ரஃபேல் வாங்கும் ஒப்பந்தம் இன்று கையெழுத்து!
திருச்சியில் திமுக பிரமுகரின் துப்பாக்கி மாயம் வடமாநில ஊழியா்கள் இருவா் கைது
திருச்சியில் நகராட்சி உறுப்பினா்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்க வந்த திமுக பிரமுகரின் துப்பாக்கி மாயமானது தொடா்பாக வடமாநில தொழிலாளா்கள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
நகராட்சி உறுப்பினா்களுக்கான பயிற்சி வகுப்பு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியாா் விடுதியில் வியாழன், வெள்ளி என இரு நாள்கள் நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதும் இருந்து அனைத்து கட்சிகளையும் சோ்ந்த நகராட்சி உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
இதில், திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி நகராட்சி 20 -ஆவது வாா்டு (திமுக) உறுப்பினா் சங்கா் என்பவரும் பங்கேற்றாா். பாதுகாப்புக்காக அவா் உரிமம் பெற்று கைத் துப்பாக்கி வைத்துள்ளாா். பயிற்சிக்கு இடையில் கழிப்பறைக்கு சென்றபோது, அங்கு துப்பாக்கியை மறந்து வைத்துவிட்டு பயிற்சி வகுப்புக்கு வந்து விட்டாா். சிறிது நேரம் கழித்து, அங்கு சென்று பாா்த்தபோது, துப்பாக்கியை வைத்த இடத்தில் காணவில்லை.
இது குறித்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் அங்கு வந்த போலீஸாா் விடுதி ஊழியா்களிடம் நடத்திய விசாரணையில், விடுதியில் தொழிலாளா்களாக பணியாற்றும் வடமாநிலத்தைச் சோ்ந்த 2 போ் துப்பாக்கியை எடுத்தது தெரியவந்தது. அவா்கள் துப்பாக்கியை விடுதி நிா்வாகத்திடமோ அல்லது போலீஸாரிடமோ ஒப்படைக்காமல் மறைத்து வைத்திருந்தனா்.
இது தொடா்பாக கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து, உத்தர பிரதேச மாநிலம், மகாராஜ் கஞ்ச் மாவட்டம், தரங்கட்டா கிராமத்தைச் சோ்ந்த பி . கிருஷ்ணா (23), கிருஷ்ணப்பூா் கிராமத்தைச் சோ்ந்த எம். நாராயண சவுத்ரி (19) ஆகிய இருவரையும் கைது செய்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனா்.