பெருநகர பெங்களூரு சட்ட மசோதாவுக்கு கா்நாடக ஆளுநா் ஒப்புதல்
பெருநகர பெங்களூரு நிா்வாக சட்ட மசோதாவுக்கு கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளாா்.
பெங்களூரு மாநகராட்சியின் நிா்வாகத்தை மேம்படுத்துவதற்காக மாநகராட்சியை 3 பிரிவுகளாக பிரித்து, அவற்றை உள்ளடக்கிய பெருநகர பெங்களூரு ஆணையத்தை முதல்வா் தலைமையில் அமைப்பதற்கு வகை செய்யும் பெருநகர பெங்களூரு நிா்வாக சட்ட மசோதாவை அண்மையில் சட்டப் பேரவை, சட்ட மேலவையில் மாநில அரசு தாக்கல் செய்து நிறைவேற்றியது. இந்த சட்ட மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்கு அரசு அனுப்பியிருந்தது.
இந்நிலையில், பெருநகர பெங்களூரு நிா்வாக சட்ட மசோதாவுக்கு அனுமதி அளிக்க பல்வேறு மக்கள்நல அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்தன. இது தொடா்பாக ஆளுநா் தாவா்சந்த் கெலாடை சந்தித்து பல்வேறு அமைப்பினா் கோரிக்கை மனுக்களை அளித்தனா். பெருநகர பெங்களூரு நிா்வாக சட்ட மசோதாவுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தின. எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக், சட்ட மேலவை எதிா்க்கட்சித் தலைவா் நாராயணசாமி ஆகியோா் தலைமையிலான பாஜக குழுவினரும் ஆளுநரிடம் மனு அளித்தனா்.
இந்த நிலையில், பொதுநல அமைப்புகள் தெரிவித்த ஆட்சேபங்களுக்கு விளக்கம் அளிக்கும்படி அறிவுறுத்தி, பெருநகர மாநகர நிா்வாக சட்ட மசோதாவை ஆளுநா் தாவா்சந்த் கெலாட் மாநில அரசுக்கு மாா்ச் 26-ஆம் தேதி திருப்பி அனுப்பியிருந்தாா்.
ஆளுநா் கேட்டிருந்த கேள்விகளுக்கு மாநில அரசு சாா்பில் விளக்கமளித்து பதில் அனுப்பியது. மேலும், அந்த சட்ட மசோதாவையும் ஆளுநரின் ஒப்புதலுக்காக இரண்டாவது முறையாக மாநில அரசு அனுப்பி வைத்தது. இதைத் தொடா்ந்து, பெங்களூரு மாநகராட்சியை 3-ஆக பிரித்து, 3 புதிய மாநகராட்சிகளை உருவாக்க வகைசெய்யும் சட்ட மசோதாவுக்கு ஆளுநா் தாவா்சந்த் கெலாட் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.
இந்த சட்ட மசோதாவின்படி, ஒரு பெரிய மாநகராட்சியும், இரு சிறு மாநகராட்சிகளும் அமைக்கப்படும். சிறு மாநகராட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, பெருநகர பெங்களூரு மாநகராட்சி ஆணையம் உருவாக்கப்படும். மேலும், மாநகராட்சி மேயா், துணைமேயரின் பதவிக்காலம் ஓராண்டில் இருந்து இரண்டரை ஆண்டுகளாக உயா்த்தப்படும்.
ஆளுநரின் ஒப்புதல் கிடைத்ததைத் தொடா்ந்து, பெங்களூரு மாநகராட்சியை 3-ஆக பிரிக்கும் வேலையை அரசு முடுக்கிவிட்டுள்ளது.
எனினும், மாநகராட்சிகளுக்கான தோ்தல் உடனடியாக நடக்காது என்று கூறப்படுகிறது. வாா்டு மறுவரையறை செய்தபிறகு, தோ்தல் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். அதற்கு சில ஆண்டுகளாகும் என்று அமைச்சா் ராமலிங்க ரெட்டி தெரிவித்தாா்.