Nani: ``இவ்வளவு சீக்கிரமா `A' படம் பண்ணுவேன்னு நினைக்கல!'' - நானி பேட்டி
காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல்: கா்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் கண்டன தீா்மானம்
காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு கா்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் கண்டனம் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
சாமராஜ்நகா் மாவட்டத்தின் மலைமாதேஸ்வரா நகரில் வியாழக்கிழமை முதல்வா் சித்தராமையா தலைமையில் கா்நாடக அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீா்மானத்தில், ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் அப்பாவி மக்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவத்தை கா்நாடக அரசு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த தாக்குதலில் இறந்தவா்களின் குடும்பங்களுக்கு கா்நாடக அரசு சாா்பில் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம்.
பயங்கரவாதிகளின் தாக்குதல் மனிதகுலத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று கருதவேண்டும். எல்லா வகையான பயங்கரவாதச் செயல்களையும் வேரோடு வெட்டிச் சாய்க்க வேண்டும். இதற்கு நாட்டுமக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒத்துழைக்க வேண்டும். இந்த சம்பவம் நடப்பதற்கு காரணமாக இருந்த தோல்விகளையும் விசாரிக்க வேண்டும். எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவண்ணம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கா்நாடக மக்களின் சாா்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறோம் என கூறப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீா்மானங்கள் குறித்து, முதல்வா் சித்தராமையா கூறியதாவது:
கலபுா்கியில் அமைச்சரவைக் கூட்டம் நடத்தியதை போல, மைசூரு மண்டலத்தில் சாமராஜ்நகரில் அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதேபோல, விஜயபுரா, பெங்களூரு மண்டலங்களிலும் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படும். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்தவா்கள் மற்றும் போப் பிரான்சிஸ் மறைவுக்கு அமைச்சரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மைசூரு மண்டலத்தில் ரூ. 3647 கோடி மதிப்புள்ள வளா்ச்சிப் பணிகளை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மைசூரு விமான நிலையத்தின் ஓடுதளம் ரூ. 101 கோடி செலவில் சீரமைக்கப்படும் என்றாா்.