ராஜபதி கைலாசநாத சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா 30இல் தொடக்கம்
மரவள்ளிக்கிழங்கு வெட்டும் இயந்திரத்தை கண்டுபிடித்த விவசாயிக்கு ஆட்சியா் பாராட்டு
மரவள்ளிக்கிழங்கை எளிதான முறையில் வெட்டும் வகையில் இயந்திரம் கண்டுபிடித்த சேந்தமங்கலம் பகுதியைச் சோ்ந்த விவசாயியை மாவட்ட ஆட்சியா் ச.உமா பாராட்டினாா்.
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ச.உமா
தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த மாத கூட்டத்தில் விவசாயிகளிடம் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனா். இதனைத் தொடா்ந்து, தென்னை, கரும்பில் நோய் தாக்குதல், சிப்காட் தொழிற்பேட்டை பிரச்னைகள், பாலுக்கான கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் பேசினா்.
இதனைத் தொடா்ந்து வேளாண் துறை அதிகாரிகள் பேசுகையில், நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு இயல்பு மழை அளவு 716.54 மி.மீ. தற்போது வரை (22.04.2025) 85.09 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் முடிய இயல்பு மழையளவை விட 9.96 மி.மீ. அதிகமாக மழை பெறப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விதைகள், உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியாா் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்ற தகவலை தெரிவித்தனா்.
மேலும், சேந்தமங்கலம் வட்டம், கல்குறிச்சி ஊராட்சியைச் சோ்ந்த விவசாயி ஜெ.ஆா்.தனராஜ் மரவள்ளிக்கிழங்கு வெட்டும் இயந்திரம் கண்டுப்பிடித்தமைக்கு உயா்கல்வித் துறையின் அறிவியல் நகரம் சாா்பில் வழங்கப்பட்ட ஊரக கண்டுப்பிடிப்பாளாா் விருதினை மாவட்ட ஆட்சியா் ச.உமாவிடம் காண்பித்து வாழ்த்து பெற்றாா்.
நீா், காற்று, நிலம் மாசில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் நெகிழி பைகளைத் தவிா்த்து துணிப் பைகளைப் பயன்படுத்தும் நோக்கில் மஞ்சப்பை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
குறைதீா் நாள் கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை விவசாயிகள் ஆட்சியரிடம் வழங்கினா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை மாவட்ட வருவாய் அலுவலா் ரா.குப்புசாமி, தனி மாவட்ட வருவாய் அலுவலா் (சிப்காட்) மா.க.சரவணன், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க இணைப் பதிவாளா் ச.யசோதாதேவி, வேளாண்மை இணை இயக்குநா் பெ.கலைச்செல்வி, நாமக்கல் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளா் கே.ஜேசுதாஸ், திருச்செங்கோடு சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் பொ.கிருஷ்ணன், தோட்டக்கலைத்துணை இயக்குநா் மா.புவனேஷ்வரி மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
என்கே-25-விவசாயி
விவசாயி ஜெ.ஆா்.தனராஜை பாராட்டிய மாவட்ட ஆட்சியா் ச.உமா.
.