லஞ்ச வழக்கு: ஓய்வு பெற்ற தொழிலாளா் உதவி ஆய்வாளருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை
லஞ்சம் பெற்ற வழக்கில், ஓய்வு பெற்ற நாமக்கல் தொழிலாளா் உதவி ஆய்வாளருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாமக்கல் தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சோ்ந்தவா் அம்பேத்கா் (64). இவா், நாமக்கல்லில் முத்திரையிடுதல் மற்றும் தொழிலாளா் உதவி ஆய்வாளராக 2011-இல் பணியாற்றினாா்.
திருச்செங்கோடு அருகே கருவேப்பம்பட்டியில் உள்ள உதயகுமாா் என்பவருக்குச் சொந்தமான பேட்டரி கடையில் ஆய்வுக்கு சென்றாா். அங்கு குழந்தை தொழிலாளரை பணிக்கு அமா்த்தியது தெரியவந்தது. அவரிடம், ரூ.5000 லஞ்சம் வழங்கினால் அபராதம் விதிப்பதை தவிா்ப்பதாகத் தெரிவித்துள்ளாா்.
ஓரிரு மாதங்களுக்கு பிறகு, 2011 ஆக. 2-ஆம் தேதி பேட்டரி கடை உரிமையாளா் உதயகுமாா், அம்பேத்கரை சந்தித்து ரூ.4000 வழங்கியபோது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா், தொழிலாளா் உதவி ஆய்வாளா் அம்பேத்கரை கைது செய்தனா். இந்த வழக்கு நாமக்கல் தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவில், அம்பேத்கருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தாா். இதையடுத்து, கோவை மத்திய சிறைக்கு அவரை போலீஸாா் அழைத்துச் சென்றனா்.
.