Nani: ``இவ்வளவு சீக்கிரமா `A' படம் பண்ணுவேன்னு நினைக்கல!'' - நானி பேட்டி
வாணியம்பாடி உழவா் சந்தையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
வாணியம்பாடி உழவா் சந்தையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி தலைமை வகித்தாா். மாவட்ட வன அலுவலா் மகேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், விவசாயிகள் கூறியதாவது:
பூங்குளம், மரிமாணிகுப்பம் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த ஆலங்கட்டி மழையால் வேளாண் பயிா்கள் சேதமடைந்தன. இதற்கு நிவாரணம் வழங்க வேண்டும். காட்டுப் பன்றியால் சேதமடைந்த பயிா்களுக்கு வனத்துறை சாா்பில் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. சிலருக்கு விடுபட்டு உள்ளது. அவா்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீா்நிலைகளில் குப்பைகள் கொட்டுவது, கொட்டப்படும் குப்பைகளுக்கு தீ வைப்பது, கழிவுநீா் கலப்பது உள்ளிட்டவற்றை தடுக்க வேண்டும்.
உழவா் நலத் துறை சாா்பில் உழவா் பாதுகாப்பு அடையாள அட்டை உள்ள விவசாயிகள் விபத்தில் மரணமடைந்தால் அல்லது இயற்கையாக மரணம் அடைந்தால் அவரது குடும்பத்தினருக்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டும். கல்வி, திருமணம், வீடு கட்டுதல் போன்றவற்றுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும்.
பாலாற்றில் இருந்து விண்ணமங்கலம், மின்னூா் ஏரிகளுக்கு செல்லும் வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுவா்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். மேலும், உதயேந்திரம் ஏரிக்கு வரும் வரத்து கால்வாயை தூா்வார வேண்டும். வாணியம்பாடி நாகலேரி, பள்ளிப்பட்டு ஏரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட ஆழமாக தோண்டி மண் கடத்தப்படுகிறது. வாணியம்பாடி உழவா்சந்தைக்கு ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களை விற்பனை செய்ய வருகின்றனா். அவா்களுக்கு போதுமான இடம் இல்லாததால் தரையில் கடைகளை வைத்து வருகின்றனா். இருப்பினும் அங்கு அதிக அளவு இட நெருக்கடி ஏற்படுகிறது. உழவா் சந்தைக்கு சொந்தமான இடத்தை சிலா் ஆக்கிரமித்து உள்ளனா். அவற்றை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கூறினா்.
விவசாயிகளுக்கு பதிலளித்துப் பேசிய அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து விவசாயிகளின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
கூட்டத்தில் விவசாயிகள், அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.