மதுரை: `ஜெயலலிதா சிலையை பராமரிக்கணும்' - திமுக மேயர்; `முதல்வருக்கு நன்றி' - எதி...
விண்வெளி நிலையத்துக்குள் வெற்றிகரமாக சென்ற சீன வீரா்கள்
சீனா அனுப்பிய மூன்று விண்வெளி வீரா்கள், அந்த நாட்டுக்குச் சொந்தமான தியான்காங் விண்வெளி நிலையத்துக்குள் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாகச் சென்றனா்.
இது குறித்து மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் அந்த நாட்டு விண்வெளி ஆய்வு மையமான சிஎம்எஸ்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஜிகுவான் ஏவுதளத்திலிருந்து வியாழக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்ட ஷென்ஷோ-20 ஓடம் தியான்காங் விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக அடைந்தது. அதில் இருந்த சென் டாங், சென் ஷாங்ருயி, வாங் ஜீ ஆகிய மூவரும், அந்த விண்வெளி நிலையத்துக்குள் வெள்ளிக்கிழமை சென்றனா்.
அங்கு ஏற்கெனவே இருந்த மூன்று விண்வெளி வீரா்கள், புதிதாக வந்துள்ள மூவருடன் இணைந்து ஐந்து நாள்களுக்குப் பணியாற்றிய பிறகு அங்கிருக்கும் ஷென்ஷோ-19 விண்வெளி ஓடம் மூலம் பூமிக்குத் திரும்பவா்.
இன்னா் மங்கோலியா தன்னாட்சிப் பிரதேசத்தின் டாங்ஃபெங் தளத்தில் ஷென்ஷோ-19 ஓடம் வரும் 29-ஆம் தேதி தரையிறங்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது விண்வெளி நிலையத்துக்குச் சென்றுள்ள மூவரும், வரும் அக்டோபா் மாதம் பூமி திரும்புவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
ஷென்ஷோ-20 விண்வெளி ஓடத்தை செலுத்தியதன் மூலம் சீனா 35-ஆவது முறையாக மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. தியான்காங் விண்வெளி நிலையத்துக்கு வீரா்கள் அனுப்பப்படுவது இது 5-ஆவது முறை.