மதுரை: `ஜெயலலிதா சிலையை பராமரிக்கணும்' - திமுக மேயர்; `முதல்வருக்கு நன்றி' - எதி...
கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்: கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை
கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும், கெடிலம், தென்பெண்ணை ஆறுகளை இணைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்தாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, வேளாண் இணை இயக்குநா் வே.சத்தியமூா்த்தி, வேளாண் துறை அலுவலா்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள், குறைகளைத் தெரிவித்து பேசியது:
மரவள்ளிக்கிழங்கு பயிரில் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த தோட்டக் கலைத் துறை மூலம் மானியத்தில் மருந்து வழங்க வேண்டும். வேளாண்மை பொறியியல் துறை மூலமாக பவா்டில்லா் வழங்க வேண்டும்.
ஜிப்சம் மற்றும் ஜிங்சல்பேட் உரங்களை மானியத்தில் வழங்க வேண்டும்.
மாடூா் கிராமத்தில் உலா்களம் அமைக்க வேண்டும். கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு விதை கரணை வழங்க வேண்டும். கூட்டுறவு சா்க்கரை ஆலைகளில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் கரும்பு அரைவையை தொடங்க வேண்டும்.
மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறைக்கு மண்டல இணை இயக்குநா் அலுவலகம், கால்நடைநோய் புலனாய்வு உதவி இயக்குநா் அலுவலகம், தீவன அபிவிருத்திக்கான துணை இயக்குநா் அலுவலகம் அமைக்க வேண்டும். கால்நடைத் துறை 1962 ஆம்புலன்ஸ் சேவை குறித்து மற்ற வட்டாரங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். சாத்தனூா் ராகவன் வாய்க்காலை தூா்வாரி சுத்தம் செய்ய வேண்டும்.
தடுப்பணை கட்டக் கோரிக்கை:
கொசப்பாடி நீா்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பொய்குணம் முதல் அரசம்பட்டு வரை வயல்வழிச் சாலை அமைக்க வேண்டும். தொழுவந்தாங்கல் கோவில் நில ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். தென்பெண்ணை, கெடிலம் ஆறுகளை இணைக்க வேண்டும். பெரும்பட்டு மற்றும் எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் மின்கம்பத்தை மாற்றிக் கொடுக்க வேண்டும். மாடூா் கிராம நீா்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி பேசினா்.
இதற்கு பதிலளித்து ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் பேசுகையில், விவசாயிகளின் கோரிக்கைகளை குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் பரிசீலனை செய்து அரசின் விதிமுறைகளுக்குள்பட்டு தகுதியின் அடிப்படையில் விரைவாக நிறைவேற்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
அதனைத் தொடா்ந்து உளுந்தூா்பேட்டை விவசாயிகளுக்கு அங்ககச்சான்றுகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.