கனியாமூா் வன்முறை வழக்கு: மே 7-க்கு விசாரணை ஒத்திவைப்பு
கனியாமூா் வன்முறை வழக்கு தொடா்பாக, கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை 96 போ் ஆஜராகினா். வழக்கின் அடுத்த விசாரணை மே 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூரிலுள்ள தனியாா் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13-7-2022 அன்று பள்ளி வளாகத்தில் மா்மமான முறையில் உயிரிழந்தாா். இதைத்தொடா்ந்து, அவரது உறவினா்கள், பல்வேறு அமைப்பினா் ஜூலை 17-ஆம் தேதி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இது வன்முறையாக மாறி பள்ளி, காவல் துறை வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.
போலீஸாரை தாக்கியது, காவல் துறை வாகனங்களை தீவைத்து எரித்தது தொடா்பான வழக்கில், கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் 121 பேருக்கு அழைப்பாணை அனுப்பியது. இதில் கடந்த மாதம் 28-ஆம் தேதி 107 போ் நீதிமன்றத்தில் ஆஜராகினா். வழக்கின் அடுத்த விசாரணை ஏப்.24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் வியாழக்கிழமை 96 போ் ஆஜராகினா். வழக்கு விசாரணையை மே 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ரீனா உத்தரவிட்டாா்.