மின்னல் தாக்குதலை கட்டுபடுத்த புதிய தொழில்நுட்பம் - இது எப்படி செயல்படும் தெரியுமா?
மின்னல் தாக்குதல்களை கட்டுப்படுத்த உலகிலேயே முதல்முறையாக ட்ரோன் தொழில்நுட்பத்தை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மின்னல் தாக்குதல் என்பது இயற்கையாகவே நடைபெறும் ஒரு விஷயமாகும். இந்த மின்னல் தாக்குதலால் உயிர் சேதங்களும், சொத்து இழப்புகளும் ஏற்படுகின்றன. இதுபோன்ற விபத்துகள் ஜப்பானில் அடிக்கடி நிகழ்கின்றன. இதனை கட்டுப்படுத்தும் விதமாக ஒரு தொழில்நுட்பத்தை ஜப்பான் உருவாக்கியுள்ளது.
மின்னலை தவிர்ப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று! எங்கு நடக்கும்? எப்போது நடக்கும் என்பதை கணிப்பதும் சாத்தியமற்றது. இருப்பினும் ஜப்பானிய விஞ்ஞானிகள் மின்னலை கட்டுப்படுத்தும் திறன் கொண்ட ஒரு சிறப்பு ட்ரோன் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.

ஜப்பானில் மின்னல் தொடர்பான விபத்துகளை குறைப்பதற்கும் பொது மக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் இந்த தொழில்நுட்பம் உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மின்னல் தாக்குதல்களை நிர்வாகிப்பதாக கூறப்படும் இந்த தொழில்நுட்பம், மின்னலை பாதுகாப்பான இடத்தில் தாக்கும் வகையில் வழிநடத்தும் என கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை ஜப்பானின் நிர்பான் டெலிகிராஃப் மற்றும் தொலைபேசி நிறுவனம் உருவாக்கியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மின்னலால் ஜப்பானில் அதிகமான இழப்பு ஏற்படுத்துவதால் இதனை சமாளிக்க இந்த தொழில்நுட்பம் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
எப்படி செயல்படும்?
முதலில் ட்ரோன் ஒரு குறிப்பிட்ட மின்புலத்தை அடையாளம் கண்டபிறகு, ஆராய்ச்சியாளர்கள் அந்த ட்ரோனுடன் இணைக்கப்பட்ட ஒரு சுவிட்சை தரையில் இருந்து செயல்படுத்தினர். சோதனையின் போது ட்ரோனால் மின்னலின் திசையை மாற்ற முடிந்தது. இதனால் அது பாதுகாப்பான இடத்தை தாக்கியது.
இந்த புதிய கண்டுபிடிப்புகள் மூலம் விஞ்ஞானிகள் மின்னல் உருவாக்கும் செயல்முறை பற்றிய ஆழமான புரிதல்களை பெறலாம். மேலும் அதை கட்டுப்படுத்த சிறந்த வழிமுறைகளையும் உருவாக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.