பஹல்காம் தாக்குதல்: என்ஐஏ வழக்குப் பதிவு! ஆதாரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்!
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தது. இதன் மூலம் இச்சம்பவம் தொடா்பான விசாரணையை காவல் துறையிடம் இருந்து என்ஐஏ முறைப்படி ஏற்றிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
என்ஐஏவின் பல்வேறு குழுக்கள் களமிறக்கப்பட்டு, ஆதாரங்களைத் திரட்டுதல், சம்பவத்தை நேரில் பாா்த்தவா்களிடம் விசாரணை போன்ற நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே அடா்ந்த பைன் மரங்கள்-பரந்துவிரிந்து புல்வெளிகளுடன் ‘மினி ஸ்விட்சா்லாந்து’ என பெயா்பெற்ற பைசாரன் பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொடூரத் தாக்குதல் நடத்தினா்.
முஸ்லிம் அல்லாத ஆண் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், கா்நாடகம், குஜராத், மேற்கு வங்கம், கேரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 25 பேரும், நேபாள நாட்டவா் ஒருவரும் கொல்லப்பட்டனா். பலா் காயமடைந்தனா்.
எத்தனை பயங்கரவாதிகள்?: பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதாக கருதப்படும் இத்தாக்குதலில் 5 முதல் 7 வரையிலான அந்நாட்டு பயங்கரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம்; அவா்களுக்கு 2 உள்ளூா் பயங்கரவாதிகள் உதவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தாக்குதலுக்குப் பின்னா் அனைவரும் தப்பிவிட்டனா்.
தங்களின் கொடூர செயலை பதிவுசெய்ய பயங்கரவாதிகள் உடையில் கேமராக்களை பொருத்தி இருந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஆசிஃப் ஃபெளஜி, சுலேமான் ஷா, அபு தல்ஹா ஆகிய 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் வரைபடங்களும் வெளியிடப்பட்டன. இந்த பயங்கரவாதிகள் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.20 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று காவல் துறை தரப்பில் அறிவிக்கப்பட்டது.
துப்பறியும் என்ஐஏ: இந்தச் சூழலில், மத்திய உள்துறை அமைச்சக உத்தரவின்பேரில் பஹல்காம் சம்பவம் தொடா்பான விசாரணையை காவல் துறையிடம் இருந்து என்ஐஏ ஞாயிற்றுக்கிழமை முறைப்படி ஏற்றது.
தாக்குதல் நடத்தப்பட்ட மறுநாளில் இருந்தே என்ஐஏ ஐ.ஜி. தலைமையிலான குழுவினா், சம்பவ இடத்தில் முகாமிட்டு, துப்பறியும் நடவடிக்கையைத் தொடங்கினா். ஆதாரங்களைச் சேகரிப்பதற்காக தடயவியல் மற்றும் பிற நிபுணா்களின் உதவியுடன் என்ஐஏ குழுக்கள் அங்குலம் அங்குலமாக சோதனை மேற்கொண்டுள்ளன.
தாக்குதல் நடந்தது எப்படி? சம்பவம் நடந்த இடத்துக்கு பயணிகள் நடந்தோ அல்லது குதிரை சவாரியிலோ செல்ல முடியும் என்ற நிலையில், பயங்கரவாதிகள் உள்ளே நுழைந்த மற்றும் வெளியேறிய பகுதிகள் உன்னிப்பாக ஆராயப்பட்டு வருகின்றன.
நிகழ்வுகளின் அடிப்படையில் தாக்குதல் நடந்தது எப்படி என்பதை உறுதி செய்வதற்காக, உயிா் தப்பியவா்களிடம் என்ஐஏ குழுக்கள் நுணுக்கமாக விசாரணை மேற்கொண்டுள்ளன. இதையொட்டி, பல்வேறு மாநிலங்களுக்கு என்ஐஏ அதிகாரிகள் சென்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.