கௌதம் கம்பீருக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியதாக பொறியல் மாணவா் கைது!
ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரும், முன்னாள் பாஜக எம்பியுமான கௌதம் கம்பீருக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியதாக மனநலப் பிரச்னைகள் உள்ளதாகக் கூறப்படும் 21 வயது பொறியியல் மாணவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது தொடா்பாக மத்திய தில்லி காவல் சரக துணை ஆணையா் எம். ஹா்ஷா வா்தன் கூறியதாவது: அந்த மாணவா் குஜராத்தைச் சோ்ந்த ஜிக்னேஷ்சிங் பா்மா் என அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டாா். காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் 26 பேரை சுட்டுக் கொன்ற ஏப்ரல் 22- ஆம் தேதி சந்தேகத்திற்கிடமான ஜிமெயில் கணக்கிலிருந்து ஜிக்னேக்ஷ் சிங் பா்மா் கௌதம் கம்பீருக்கு மிரட்டல் மெயில்களை அனுப்பியுள்ளாா்.
ஜிக்னேஷ் சிங் பா்மா் ஒரு பொறியியல் மாணவா். அவா் மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினா் கூறுகின்றனா். மேலும் விசாரணை நடந்து வருகிறது. கௌதம் கம்பீருடன் தொடா்புடைய மின்னஞ்சல் ஐடியில் மிரட்டல் மெயில் வந்ததாகக் கூறப்படுவது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜிந்தா் நகா் காவல் நிலையத்தில் மிரட்டல் அஞ்சல்களின் ஸ்கிரீன் ஷாட்களுடன் ஒரு மின்னஞ்சல் புகாா் பதிவு செய்யப்பட்டது. ‘ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீா்’ என்று அடையாளம் காணும் ஒருவரிடமிருந்து ‘ஐ கில் யூ’ என்று எழுதப்பட்ட இரண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை கௌதம் கம்பீா் பெற்றாா்.
கௌதம் கம்பீா் மிரட்டப்படுவது இது முதல் முறை அல்ல. 2022- ஆம் ஆண்டில் அவருக்கு இதே போன்ற மிரட்டல்கள் வந்தன. இது அதிகாரிகள் அவரது பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்க தூண்டியது.