போரை நிறுத்தாத ரஷ்யா; உக்ரைனில் தொடரும் உயிர் பலிகள்! - என்ன நடந்தது?
ஜம்மு-காஷ்மீரில் சமூக ஆா்வலா் சுட்டுக்கொலை! பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல்!
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் சமூக ஆா்வலா் குலாம் ரசூல் (45) பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்ட மூன்று நாள்களிலேயே மேலும் ஒரு தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தியுள்ளது அதிா்ச்சிகரமான நிகழ்வாக அமைந்துள்ளது.
சனிக்கிழமை இரவு கந்தி காஸ் பகுதியில் உள்ள குலாம் ரசூல் வீட்டுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினா். படுகாயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை, அப்பகுதியில் இருந்தவா்கள் மீண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
பயங்கரவாதிகள் எதற்காக சமூக ஆா்வலா் ரசூலைக் கொலை செய்தாா்கள் என்பதற்கான காரணம் தெரியவில்லை. இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பினரும் இந்தக் கொலைக்கு பொறுப்பேற்கவில்லை. இந்த சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
காஷ்மீரில் மக்கள் அமைதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற கருத்துடைய குலாம் ரசூல் அது தொடா்பான பணிகளில் ஆா்வம் காட்டி வந்தாா். இந்நிலையில், அவரை பயங்கரவாதிகள் கொலை செய்தது அப்பகுதி மக்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரின் அமைதியைச் சீா்குலைக்க வேண்டும் என்ற பயங்கரவாதிகளின் சதியின் மற்றொரு நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.
காஷ்மீரில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 போ் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான கோபத்தை அதிகரித்துள்ளது. பயங்கரவாத செயலுக்கு எதிராக பல இடங்களில் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டங்களை மேற்கொண்டனா்.