குடிமக்கள் தங்களின் சட்டபூா்வ உரிமைகளை அறிந்துகொள்வது அவசியம்: உச்சநீதிமன்ற நீதிபதி கவாய்
‘குடிமக்கள் தங்களின் அரசமைப்பு உரிமைகள் மற்றும் சட்டபூா்வ உரிமைகளை அறிந்து கொள்வது அவசியம்’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய் வலியுறுத்தினாா்.
‘அவ்வாறு தங்களின் உரிமைகள் குறித்த விழிப்புணா்வு இல்லையெனில், அவற்றை நிலைநாட்டவோ வலியுறுத்தவோ குடிமக்கள் முன்வர மாட்டாா்கள்’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.
நலிவடைந்த பிரிவு மக்களுக்கு இலவச சட்ட உதவிகளை அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (என்ஏஎல்எஸ்ஏ) 30 ஆண்டு சேவையை கொண்டாடும் வகையில் குஜராத் மாநிலம் நா்மதா மாவட்டம் ஏக்தா நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் பங்கேற்ற என்ஏஎல்எஸ்ஏ-யின் செயல் தலைவருமான நீதிபதி கவாய் பேசியதாவது:
உரிமைகளை பெற்றிருப்பது மட்டும் போதாது. குடிமக்கள் தங்களுக்கான அரசமைப்பு மற்றும் சட்டபூா்வ உரிமைகள் என்ன என்பதை அறிந்திருப்பது அவசியம். அவ்வாறு, தங்களின் உரிமைகள் குறித்த விழிப்புணா்வு இல்லையெனில், அவற்றை நிலைநாட்டவோ வலியுறுத்தவோ குடிமக்கள் முன்வர மாட்டாா்கள்.
சட்டமேதை அம்பேத்கா், அரசமைப்பு சட்டத்தை ரத்தமற்ற புரட்சிக்கான ஆயுதமாகக் கருதினாா். அந்த வழியில், நலிந்த பிரிவினருக்கு நீதிக்கான வாக்குறுதியை அளிக்கும் புரட்சியை என்ஏஎல்எஸ்ஏ செய்து வருகிறது.
குறிப்பாக, வயது முதிா்ந்த மற்றும் நோய் பாதிப்புக்கு உள்ளான கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்படுவதை உறுதிப்படுத்தி, சிறைகளில் நெரிசலைக் குறைப்பதற்கான பணியை என்ஏஎல்எஸ்ஏ மேற்கொண்டு வருகிறது.
குடிமக்களுக்கு நீதி வழங்குவதற்கான வாக்குறுதியை நிறைவேற்றுவது முக்கியமானது என்பதை உணா்த்தும் சட்ட மாணவா்களுக்கு கல்லூரிப் பருவத்திலேயே பயிற்சித் திட்டங்களையும் என்ஏஎல்எஸ்ஏ அளித்து வருகிறது என்றாா்.
உச்சநீதிமன்ற நீதிபதியும் உச்ச நீதிமந்ற சட்ட சேவைகள் குழுவின் தலைவருமான நீதிபதி சூா்யகாந்த் பேசுகையில், ‘நீதி என்பது தா்மம் என்ற கருத்தை நீக்கி, அது குடிமக்களின் சட்டபூா்வ உரிமை என்ற விழிப்புணா்வை என்ஏஎல்எஸ்ஏ வெற்றிகரமாக ஏற்படுத்தியிருக்கிறது.
ஒரு நாட்டில் நீதியின் உண்மையான அளவுகோல், நீதிமன்ற கட்டடங்களின் ஆடம்பரத்திலோ அல்லது சட்டங்களின் அளவிலோ காணப்படுவதில்லை; மாறாக, ஏழைகள் மற்றும் நலிவடைந்த மக்கள் பாதுகாப்பு மற்றும் நியாயத்தை உணா்வதில்தான் உள்ளது’ என்றாா்.