செய்திகள் :

சொல்லப் போனால்... கூட்டணிக் கட்சி பரிதாபங்கள்!

post image

கூட்டணியா? கூடவே கூடாது... முடியவே முடியாது... நாங்கள்ளாம் யாரு?... இவிங்களோட கூட்டணி சேர்ந்து எங்களுக்கு ஆகப் போவது என்னங்க? அதெல்லாம் சரியா வராதுங்க... நாங்க இல்லாம, போன தேர்தல்ல என்ன நடந்துச்சு பார்த்தீங்கள்ள...

அடடா, என்ன பேச்சுகள், எத்தனை சவால்கள், எவ்வளவு முழக்கங்கள்? அதிமுக தலைவர்களும் சரி, பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களும் சரி, கொஞ்சம்கூட விட்டுக்கொடுக்காமல் முழங்கிக் கொண்டிருந்தார்கள். இவற்றையெல்லாம் பார்த்து யார் யாரெல்லாம் நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்திருப்பார்கள், தெரியவில்லை.

திடீரென்று ஒரு நாள் எடப்பாடி பழனிசாமி தில்லிக்குச் செல்கிறார், அமித் ஷாவைச் சந்திக்கிறார் என்றார்கள். இன்னும் சில தலைவர்களும் தில்லி செல்கிறார்கள் என்றார்கள். கடைசியில் பார்த்தால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒட்டுமொத்தமாக அதிமுகவின் முக்கியமான தலைவர்கள் எல்லாரும் சேர்ந்தாற்போல அமித் ஷாவைச் சந்தித்து மலர்க்கொத்து கொடுத்துவிட்டு, ‘ச்சும்மா’ தமிழ்நாட்டின் வளர்ச்சி பற்றியும் கொஞ்சம் திமுக அரசின் செயல்பாடுகள் பற்றியும் பேசிக்கொண்டிருந்துவிட்டு வந்துவிட்டார்கள் (என்றுதான் பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய எடப்பாடி பழனிசாமிகூட தெரிவித்தார்).

ஆனால், இவற்றுக்கெல்லாம் முன்னர், சில மாதங்களாக, அதிமுகவின் சீனியர் தலைவர்களில் ஒருவரும், ‘அம்மா’ இல்லாத கூவத்தூர் ஆலோசனை முகாமில் அன்றைய நிலைமையில் கட்சியையும் ஆட்சியையும் எம்எல்ஏக்களையும் கட்டிக் காப்பாற்றி வைக்கிற பண பலம் இல்லாததால் முதல்வர் வாய்ப்பைப் பெற முடியாமல் போய்விட்டவர் என்று கூறப்படுபவருமான கே.ஏ. செங்கோட்டையன், என்னவோ கொஞ்சமும் பிடிகொடுக்காமல் ஏறுக்குமாறாக எதையாவது  செய்துகொண்டிருந்தார்;  செங்கோட்டையன் நல்லவரா, கெட்டவரா? என்று பட்டிமன்றம் நடத்தாததுதான் குறை. கடைசியாக, தில்லிக்குச் சென்று அமித் ஷாவை அவரும் பார்த்துவிட்டு வந்தார்; எதற்காக இந்தச் சந்திப்பு? இருவரும் என்ன பேசிக்கொண்டார்கள்? யார் ஏற்பாடு? ஒருவேளை இவர்கள் இருவரும்கூட தமிழ்நாட்டின் வளர்ச்சி பற்றிதான் பேசினார்களா? யாருக்கும் தெரியாது; யாரும் எதுவும் சொல்லவுமில்லை. ஒருவேளை இந்தச் சந்திப்பின்வழி சேர வேண்டியவர்களுக்குச் செய்தி சென்று சேர்ந்துவிட்டிருக்கும் இருக்கும்போல.

இந்தக் களேபரங்கள் எல்லாம் நடந்து ஒரு வாரம்போல இருக்கும், திடீரென சென்னை வந்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. வந்த நாள் இரவே எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைவர்கள் சந்தித்தனர்; ஆலோசனை நடத்தினர். இணையாக, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலையை அனுப்பிவிட்டு நயினார் நாகேந்திரனைக் கொண்டுவரும் வேலையும் நடந்துகொண்டிருந்தது.

இரண்டாம் நாள் மாலை ஒரே மேடையில் – செய்தியாளர் சந்திப்பில் - எடப்பாடி பழனிசாமியையும் வைத்துக்கொண்டு, அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானதாக அறிவித்த அமித் ஷா, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலைத் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து சந்திப்போம்; தேசிய அளவில் மோடி தலைமை, தமிழ்நாட்டில் இபிஎஸ் தலைமை என்று அறிவித்துவிட்டார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது, எடப்பாடி பழனிசாமியின் உடல்மொழியையும் முகபாவனைகளையும் என்னதான் தனியே டீகோட் செய்து பார்த்தாலும் ஒருவராலும் முழுமையாகப் புரிந்துகொண்டுவிட முடியும் என்று தோன்றவில்லை.

செய்தியாளர் சந்திப்புக்குப் பின் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கும் சென்று அவரை மறுபடியும் ஒருமுறை சந்தித்துவிட்டுதான் தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றார் அமித் ஷா. ஆக, அதிமுக – பாஜக கூட்டணி கன்பர்ம்ட். பிறகு அந்த முதல் பாராவில் பேசின வசனங்கள் எல்லாம்?... அது அப்போ, ச்சும்மா, லுல்லுல்லாயி...

ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஏறக்குறைய ஓராண்டு காலம் இருக்கிற நிலையில் அமித் ஷாவின் இந்தக் கூட்டணி அறிவிப்பு நிறைய கட்சிகளை அல்லது தலைவர்களைத் திக்குத் தெரியாத நிலையில், அடுத்தது என்ன? என்ற யோசனைக்குள் தள்ளிவிட்டிருக்கும் எனலாம். பாவம், இந்தக் கூட்டணிக்கான  கட்சிகள்.

பாஜகவும் அதிமுகவும் இந்தக் கூட்டணி அமைக்காமல் இருக்கும்பட்சத்தில், இன்னும் ஓராண்டு காலத்துக்கு, தேர்தல் அறிவிக்கப்படும் நாள் வரையிலும்கூட, யார் யாருடன் - திமுக அணியா, அதிமுக அணியா, பாஜக அணியா, அல்லது தனியா என்று - சேருவார்கள் என்பதற்காகப் பெரிய பேச்சுவார்த்தைகள் தொடர்ந்துகொண்டேயிருந்திருக்கும். தங்கள் பலத்தைப் பெரிதுபடுத்திக் காட்டிப்  பேரங்களும் (தொகுதிக்காக மட்டும்தான், சட்டென எல்லாருக்கும் நினைவுக்கு வருவது போல வேறொன்றுமில்லை) தொடர்ந்துகொண்டே இருந்திருக்கும். ஊடகங்களும்கூட கற்பனை கலந்த கூட்டணிகள் பலவற்றை உருவாக்கிக் கொண்டிருந்திருக்கும்.

அமித் ஷா அறிவிப்புக்கு முதல் பலி, அனேகமாக இவ்விரு கூட்டணித் தரப்பினரின் தோழர்கள்தான். பரஸ்பரம் ஒருவரையொருவர் நம்பி எவ்வளவோ செய்துகொண்டிருப்பார்கள், முதல்வர் ஜெயலலிதா உடல்நலமின்றி இருந்தபோது எந்த அளவுக்கு விசுவாசமாக நடந்துகொண்டிருப்பார் ஓ. பன்னீர்செல்வம்? அதிமுகவிலிருந்து முற்றிலுமாக விலக்கப்பட்ட பின்னரும்கூட எந்த அளவுக்கு நம்பிக்கையுடன் அரசியல் செய்துகொண்டிருந்தார்? எவ்வளவு துணிச்சலாக பேரலல் அதிமுக போல செயல்பட்டுக்கொண்டிருந்தார்? டி.டி.வி. தினகரன் மட்டும் சும்மாவா? எவ்வளவு நம்பிக்கையுடன் இருந்திருப்பார்? எப்படியும் அதிமுக ஒன்றுபட்டுவிடும்; எடப்பாடி பழனிசாமியை எப்படியும் பாஜக வழிக்குக் கொண்டுவந்துவிடும். ஒருங்கிணைந்த அதிமுகதான், ஒருவேளை ‘சின்னம்மா’வுக்கு மட்டும் வாய்ப்பு இல்லாமல் போகலாம், பரவாயில்லை என்ற லெவலுக்கு இருந்தால், செய்தியாளர் சந்திப்பில் ஒரே கேள்வி – ஒரே பதிலில் இவர்கள் இருவரையும் இலவு காத்த கிளிகளாக உருமாற்றிவிட்டிருக்கிறார் அமித் ஷா.

அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடாது; கூட்டணிக்குள் பிற கட்சிகளைச் சேர்ப்பது பற்றித் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்படும் என்ற அறிவிப்பின் மூலம் நமக்கு அதிமுகதான், எடப்பாடியாச்சு, அவர்கள் கட்சிக்காரர்களாச்சு என்ற பாஜக நிலையைத் தெளிவுபடுத்தியிருக்கிறார் அமித் ஷா. பாவம், இவ்விரு கட்சித் தலைவர்களும். ஏதாவது ரகசிய வாக்குறுதி கிடைக்கப் பெறாதபட்சத்தில், எப்போதும்போல எடப்பாடி கறாராக இருந்துவிட்டால், ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகிய இருவரின் நிலையும் ரொம்பப் பாவமாகிவிடும். அறிவாலயம் பக்கம் போகவே முடியாது; வேறு எங்கேதான் செல்வது? குறைந்தபட்சம் இவர்களை நம்பியிருப்பவர்களுக்காவது ஏதாவது வழிகாட்ட வேண்டும் அல்லவா?  

திமுக கூட்டணி உறுதியாக இருப்பதாக அறிவித்துக்கொண்டே இருக்கிறது. இந்த உறுதியையும்கூட இப்போது அமித் ஷாவின் அதிமுக கூட்டணி அறிவிப்புதான் மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது என்றால் மிகையில்லை. ஏனென்றால், பாஜகவுடன் அதிமுக சேர்ந்துவிட்டதால், திமுக கூட்டணியிலுள்ள கட்சிகளுக்கு இனிமேல் போய்ச் சேர வலுவான வேறோர் இடம் இல்லாமல் போய்விட்டது. வலுவான இரண்டு கழகங்களையும் விட்டுவிட்டு இன்னொரு இடத்துக்குச் செல்வதற்கான ஆவலாதி மிகமிகக் குறைவு. ஆக, மெயின் டோர் க்ளோஸ்ட்.

கட்சியின் தலைவர் மறுத்துக்கொண்டிருக்க, துணை முதல்வர், இரண்டாமிடம் போன்ற ஏதாவதொன்றைப் பற்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தரப்பில் யாராவது ஒருவர் எப்போதும் பேசிக்கொண்டேயிருப்பார். இவர்கள் எப்போது வேண்டுமானாலும் ‘புட்டுக்கொண்டு’போய் அதிமுகவுடன் அணி சேர்ந்துவிடுவார்களோ என்ற அச்சத்தை திமுக உள்பட அணியிலுள்ள பலருக்கும் ஏற்படுத்திக்கொண்டே இருப்பார்கள். இனி இப்படியெல்லாம் பேசுவதற்கான வாய்ப்பே அற்றுப் போய்விட்டதாகக் கொள்ளலாம்.

வேட்பு மனுத் தாக்கலுக்கான கடைசி நாள் வரையிலும் இரண்டு தரப்பிலும் பேசிக்கொண்டிருக்கிறோம்; நல்ல முடிவெடுப்போம் என்று சொல்பவர்கள், சொல்லக் கூடியவர்கள் தேமுதிகவினர். கொஞ்ச நாள் முன்னர்தான், மாநிலங்களவை உறுப்பினர் பதவியா? அப்படியெல்லாம் நாங்கள் எதுவுமே சொல்லவில்லையே என்று தேமுதிகவின் கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் எடப்பாடி பழனிசாமி. ஏற்கெனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தவர்களில்கூட யாரையும் அழைக்காமல் செய்தியாளர் சந்திப்பை அமித் ஷா முடித்துவிட்ட நிலையில், வான்டட் ஆகத்தான் சென்று இந்த வண்டியில் ஏற வேண்டியிருக்கும் தேமுதிகவுக்கு. ஏனெனில் திமுக கூட்டணியில் யாரும் இவர்களைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை. எனவே, கடைசி வரை பேரம் பேசிக்கொண்டிருக்க வேண்டிய கட்டாயமும் இருக்காது.

பாட்டாளி மக்கள் கட்சிக்கும் ஸேம் பின்ச். எங்கே போய்ச் சேருவது? எங்கேயாவது போய்ச் சேர வேண்டியதுதான். ஏற்கெனவே தந்தைக்கும் தனயனுக்கும் ஏழாம் பொருத்தமாகிக் கட்சிக்குள் குமுறிக்கொண்டிருக்கிறது. நிச்சயம் தனித்துப் போட்டியிடும் அபாயகரமான – பெரும் செலவும் வைக்கக் கூடிய – யாருக்கும் பயனளிக்காத ஒரு முடிவை பாமக எடுக்க வாய்ப்பே இல்லை. எங்கே போய்விடப் போகிறார்கள், வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்றுதான் இரண்டு கழகங்களின்  கூட்டணிகளுமே இவர்களைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கும். பாஜகவில் ஏதாவது ஸ்பெஷல் ஆஃபர் கொடுத்தால்தான் உண்டு.

ஏனென்றால் திமுக கூட்டணியிலிருந்து பாமகவுக்கு ஸ்பெஷல் ஆஃபருக்கு வாய்ப்பில்லை. ஏற்கெனவே, கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்கிறது. இரண்டு கட்சிகளும் எப்போதும் ஆளுக்கொரு பக்கமாகத்தான் இருந்து (இழுத்துக்) கொண்டிருக்கிறார்கள்; ரிஸ்க் எடுப்பதில்லை. 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் ஒருமுறை பாமகவும் விசிகவும் இணைந்திருந்தன, ஆனால், அவை இருந்த திமுக கூட்டணி தோற்றுப் போய்விட்டது. எனவே, நோ சான்ஸ்!

நாம் தமிழர் கட்சிதான் என்ன செய்யுமோ? இவ்வளவு காலமாக (இப்போதும்) தனித்துப் போட்டி என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள், முன்னர் போட்டியிடவும் செய்தார்கள். இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடனாவது சேர்ந்து வலுப்படுத்துவார்கள் அல்லது வலுப்பெறுவார்கள் என்று கருதப்பட்டது.

அதுவும் வேறெந்தக் கட்சியும் செய்யத் துணியாத பாணியில் பெரியாரைப் பற்றிப் பேசாத ஒன்றைப் பேசியதாகக் கொளுத்திப் போட்டார் கட்சித் தலைவர் சீமான். பெரிய சர்ச்சை, விவாதம். முன்னெப்போதுமில்லாத தரப்பிலிருந்தெல்லாம் சீமானுக்கு ஆதரவுக் கரங்கள் நீண்டன. சங்கி என்றால் சகோதரர் என்றார். ஒருவேளை அதிமுக – பாஜக கூட்டணி அமையாமல் இருந்திருந்தால், எப்படியும் பாஜக அணியில் இடம் பெறுவதற்கான எல்லா தகுதி நிலைகளையும் பெற்றிருந்தார். ஆனால், சின்னதாக  அமித் ஷா வெடிவைத்துவிட்டார்.

ஆசைப்பட்டாலும்கூட வேறு வழியே இல்லை. இனி அனேகமாகத் தனித்துதான் நா.த.க. போட்டியிட வேண்டியிருக்கும். ஆனால், இந்த முறை தனித்துப் போட்டியிடுவதில் நிறைய சிக்கல்கள். பெரியார் பற்றிய பேச்சுக்குப் பிறகு ஒரு பகுதி ஆதரவுத் தளம் நழுவிப் போய்விட்டது எனலாம். ஈழத் தமிழர் போராட்டம், தலைவர்கள் பற்றிய காமென்ட்ஸ் போன்றவற்றால் அந்த ஏரியாவும் வெறுங்கூடாகி விட்டதாக எதிர்ப்பாளர்கள் கூறுகிறார்கள். அல்லாமல் முன்னாள் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யோ, பெரியார், அம்பேத்கரோடு தமிழ்த் தேசியத்தையும் சேர்ந்து தன் பிரசார குடைக்குள் கொண்டுவந்ததன் மூலம் நாதகவை, அதன் பெரும் பலமாகக் கருதப்படும் இளைய தலைமுறையினரைக் கரைக்கத் தொடங்கியிருக்கிறார்.

பிறகு இருக்கவே இருக்கிறது. முன்னாள் நடிகையொருவர் கொடுத்துள்ள புகாரும் தொடர்பான விசாரணைகளும். உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து பெற்ற உத்தரவின் மூலம்தான் கொஞ்சம் இளைப்பாறிக் கொண்டிருக்கிறார் நாதக தலைவர். அல்லாமல் அந்த நடிகையைப் பற்றிப் பேசிய பேச்சுகள் இன்னமும் சேதாரங்களாக  உலவிக்கொண்டிருக்கின்றன.

அப்படியெல்லாம் இல்லவே இல்லை என்று இப்போது வேண்டுமானால் மறுக்கக் கூடும் என்றாலும்கூட, அதிமுகவும் சரி, பாஜகவும் சரி, திமுக கூட்டணி தவிர்த்த எல்லா தரப்புமே கொஞ்சம் ஆசைப்பட்டுக் கொண்டிருந்தன நடிகர் விஜய்யின் த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்கலாம் என. அமித் ஷா அறிவிப்பின் மூலம் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இனி விஜய்யின் கட்சி தனித்துதான் போட்டியிட வேண்டியிருக்கும்போல. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்த இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டிருக்கிறார் விஜய். படத்துக்கு 200 கோடி ரூபாய் சம்பளத்தையும் நம்பர் ஒன் ஸ்டார் பட்டத்தையும் விட்டுவிட்டு வந்து, முதல்வர் கனவில் மிதக்கிற விஜய், இனிமேல் போய் எந்தக் கூட்டணியுடனாவது ஜூனியர் பார்ட்னராக இருக்க முடியுமா?   

ஆனால், திரைப்படங்களில் புரட்சிகரமான வசனங்கள் பேசியதைத் தவிர்த்து, நேரடியான எந்தவித அரசியல் அனுபவமே இல்லாமல், புதிதாக ஒரு கட்சியை ஆரம்பித்து, எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி இல்லாமல், எப்படி தேர்தலில் விஜய் போட்டியிடுவார்? எவ்வளவு செலவு செய்வார்? எங்கிருந்து செலவு செய்வார்? ஏதோ திமுக ஆதரவு வாக்குகளைப் பிரிப்பதற்காகத்தான் யாரோ பி டீமாக விஜய்யை வைத்து இயக்குகிறார்கள் என்றெல்லாம் கிசுகிசுக்கிறார்களே, ஒருவேளை அப்படி ஏதாவது இருக்குமோ? (ஜெயிக்கிறதைவிட பிரிக்கிறதுதான் டார்கெட் என்று...).

திமுக கூட்டணி, அதிமுக – பாஜக கூட்டணி தவிர்த்து, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக இவர்களில் யாரும் யாரோடும் சேர்ந்து மற்றோர் மூன்றாவது கூட்டணி உருவாக்க சாத்தியமா? ஏற்கெனவே, மக்கள் நலக் கூட்டணி என்ற பரிசோதனை ஒரு கொடுங்கனவாகிவிட்டதால் யாரும் மீண்டும் முயற்சிக்க வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது.

அமித் ஷாவின் அறிவிப்பின் மூலம் திமுகவுக்கு ஒரு பெரிய லாபம். எப்படியென்றாலும் கடைசி நேரத்தில், எதிர்முகாமுக்குச் செல்வதைப் போல பாவனை காட்டி, கொஞ்சம் அழுந்தப் பேரம் பேசலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த கூட்டணிக் கட்சிகள் எதுவும் இனி அவர்களை விட்டுப் பிரிய வாய்ப்பில்லை; நினைத்தும் பார்க்காது என்றே கூறலாம். அதிமுகவே பாஜகவுடன் போன பிறகு இவர்கள் அங்கே எங்கே செல்வது? வேறு யார் அழைக்கப் போகிறார்கள்? இந்த அளவுக்கு யார் வைத்துக்கொள்வார்கள்?

விரைவில் அதிமுக – பாஜக கூட்டணிக்கான குறைந்தபட்ச செயல்திட்டம் வகுக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார் அமித் ஷா. ஒருவேளை எல்லாரையுமே மொத்தமாக அள்ளி உள்ளே (கூட்டணிக்கு உள்ளேதான்!) போட ஏதாவது திட்டம் வைத்திருக்கிறாரோ என்னவோ?

ம். அமித் ஷாவினுடைய ஒரே ஒரு அறிவிப்பு. இப்படி நிறைய பேரைப் பேரவைத் தேர்தலை நினைத்துப் புலம்புகிற லெவலுக்கு (அதுவும் இன்னும் ஒரு வருஷ காலத்துக்கு) தள்ளிவிட்டிருக்கிறது. பாவம், கூட்டணிக்காகவே காத்திருக்கிற அரசியல் கட்சிகள்!

இதையும் படிக்க.. சொல்லப் போனால்... யாகாவா ராயினும் நாகாக்க...

வரிவிதிப்புகள்! டிரம்ப்பின் இடிமுழக்கமும் உலகின் பெருங் கலக்கமும்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உலக நாடுகள் மீதான வரி விதிப்பு அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்கா உள்பட பெரும்பாலான நாடுகளின் பங்குச் சந்தைகள் நிலைகுலைந்திருக்கின்றன; கடும் வீழ்ச்சியைச் சந்தித்துக் க... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... நல்லதைச் சொல்வது தப்பா?

செய்திகளில் கடந்த சில நாள்களாக இடம்பெற்றுக்கொண்டிருந்த சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் சதீஷ்குமார் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டு, மருத்துவம் - ஊரக நலப் பணிகள் இயக்ககத்துக்கு அனுப்... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... நீதி தேவதை கலக்கம்!

நீதிமன்றத் தீர்ப்புகளும் நீதிமன்றங்களும் நீதிபதிகளின் பெயர்களும் கடந்த இரு வாரங்களாகத் தொடர்ந்து செய்தித் தலைப்புகளில் பரபரப்பாக இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.போக்சோ வழக்கொன்றில், பாதிக்கப்பட்ட சிறும... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... நகைக் கடன் ஏலங்களும் லட்சம் கோடி தள்ளுபடிகளும்!

வாராக் கடன் அல்லது செயல்படாத சொத்துகள் என்ற பெயரில் கடந்த பத்தாண்டுகளில் நாட்டில் வங்கிகளால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை மட்டும் ரூ. 16.35 லட்சம் ... மேலும் பார்க்க