நீலகிரி செல்வோர் கவனத்துக்கு... திருப்பி அனுப்பப்படும் வாகனங்கள்!
சொல்லப் போனால்... நீதி தேவதை கலக்கம்!
நீதிமன்றத் தீர்ப்புகளும் நீதிமன்றங்களும் நீதிபதிகளின் பெயர்களும் கடந்த இரு வாரங்களாகத் தொடர்ந்து செய்தித் தலைப்புகளில் பரபரப்பாக இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
போக்சோ வழக்கொன்றில், பாதிக்கப்பட்ட சிறுமியின் மா....களைப் பிடித்ததும் அவருடைய பைஜாமாவின் நாடாக்களை அகற்றிக் கீழிறக்கியதும் வல்லுறவு முயற்சிக் குற்றமாகாது என்று குறிப்பிட்ட அலாகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ர, ஏற்கெனவே சாட்டப்பட்டிருந்த பத்து ஆண்டு சிறை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கக் கூடிய குற்றம் புரிந்திருந்தபோதிலும் மூன்றாண்டு முதல் ஏழாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கக் கூடியதாக மாற்றி உத்தரவு பிறப்பித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் காஸ்கஞ்ச் நகரிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் இருக்கிறது சுமார் 200 குடும்பங்கள் மட்டுமே வசிக்கிற இந்தக் குக்கிராமம். 2021, நவ. 10 ஆம் தேதி சாலையில் தாயுடன் நடந்துசென்றுகொண்டிருந்த 11 வயதுச் சிறுமியை, அவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான பவன், ஆகாஷ் என்ற இரு இளைஞர்கள் லிப்ட் தருவதாக மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றிருக்கின்றனர். சிறிது தொலைவிலேயே சாலையில் ஒரு பாலத்தடிக்கு இழுத்துச் சென்று வல்லுறவுக்கு முயன்றபோது, சிறுமியின் கூச்சலைக் கேட்டு அந்த வழியில் சென்றவர்கள் வரவே, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் தப்பியோடிவிட்டனர். பல முறை முயன்றும் காவல்துறை வழக்குப் பதிவு செய்ய மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், 2022, ஜனவரியில் போக்சோ நீதிமன்றத்தை நாடி வழக்குப் பதிவு செய்ய வைத்துள்ளார் சிறுமியின் தாய். போக்சோ சட்டத்தின் கீழ் வல்லுறவு உள்பட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து, ‘இவையெல்லாம் வல்லுறவின் கீழ் வராதென’ குற்றம் சாட்டப்பட்டவர்கள் அலாகாபாத் நீதிமன்றத்தை அணுகியதைத் தொடர்ந்துதான் தற்போதைய உத்தரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிவந்திருக்கிறது.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும், விவாதங்களையும் ஏற்படுத்திய நிலையில், இந்த விஷயத்தில் தலையிடுமாறு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு மூத்த வழக்கறிஞர் ஷோபா குப்த எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் தானாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
அலாகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் உத்தரவை உடனடியாக நிறுத்திவைத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், ஏ.ஜி. மாசி ஆகியோரைக் கொண்ட அமர்வு, தீர்ப்பை ‘முற்றிலும் அறிவைப் பயன்படுத்தாத, மனிதத் தன்மையற்ற அணுகுமுறை’ என்றும் குறிப்பிட்டது.
‘தீர்ப்பின் சில பத்திகள் முற்றிலும் மனித உணர்வுகள் அற்றவராக எழுதியவரைக் காட்டுகிறது என்பதைச் சொல்வதற்காக மிகவும் வருந்துகிறோம்’ என்று குறிப்பிட்டு நீதிபதிகள் இருவரும், தீர்ப்பில் உயர் நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டுள்ள சில அவதானிப்புகளையும் நிறுத்திவைக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
‘இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள இதுவரையிலும் ரூ. 2.5 லட்சம் வரை கடன் வாங்கிவிட்டோம். உச்ச நீதிமன்றம் தீர்ப்பை நிறுத்திவைத்தபோதிலும், அடுத்து ஊரில் எங்களுக்கு என்ன நேரிடுமோ என மிகவும் அச்சமாக இருக்கிறது’ என்று தம்மைச் சந்தித்த பத்திரிகையாளரிடம் சிறுமியின் உறவினர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
அடுத்தது என்ன? எப்போது? பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிர்காலம் என்ன? எங்கோ தொலைதூரத்தில் இருக்கிற, குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்கள் சார்ந்த உயர் சாதியினரே அதிகம் வசிக்கிற, அந்தக் கிராமத்தில் இனி எவ்வாறு அந்தக் குடும்பத்தினர் வாழப் போகிறார்கள்?
*
இந்த வழக்கில் அலாகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதற்கு முந்தைய நாள்தான், இதேபோன்ற இன்னொரு வழக்கின் மேல் முறையீட்டில் ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியின் ‘விடுதலைத் தீர்ப்பைக்’ கடுமையாக விமர்சித்த உச்ச நீதிமன்றம், சிறுமிக்கு எதிராக வல்லுறவுக் குற்றமிழைத்த நபருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனையை உறுதி செய்தது.
சிறுமிக்கு வல்லுறவுக் கொடுமை இழைத்த வழக்கில், 21 வயது இளைஞருக்கு ஏழாண்டுகள் சிறைத் தண்டனை விதித்து 1987 ஆம் ஆண்டில் விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கின் மேல் முறையீட்டில் குற்றம் சாட்டப்பட்டவரை உயர் நீதிமன்றம் விடுவித்தது அறிவுபூர்வமற்றதென குறிப்பிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் கரோல் ஆகியோர், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரைத் தீர்ப்பில் உயர் நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டிருப்பதையும் குறைகூறியுள்ளனர்.
தண்டனை விதிக்கப்பட்டவரின் மேல் முறையீட்டை விசாரித்து, அவரை விடுதலை செய்ய ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றம் 26 ஆண்டுகள் எடுத்துக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, தண்டனை ரத்துக்கு எதிராக ராஜஸ்தான் மாநில அரசு, 2013 ஆம் ஆண்டில் செய்த மேல் முறையீட்டை விசாரித்து, 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
பாதிக்கப்பட்ட சிறுமி நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணையின்போது குற்றச் செயல் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை; மீண்டும் மீண்டும் கேட்டபோதும், ‘அமைதியாக அவர் கண்ணீர் விட்டழுதுகொண்டிருந்தார்’. குற்றம் சாட்டப்பட்டவரின் விடுதலைக்கு இதை ஒரு காரணமாக எடுத்துக்கொண்டிருக்கிறது உயர் நீதிமன்றம்.
குறுக்கு விசாரணையின்போது, கன்னங்களில் கண்ணீர் வழிய அமைதியாக அந்தச் சிறுமி இருந்ததைக் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாது. அறியாக் குழந்தையின் கண்ணீரை, வளர்ந்த ஒருவரின் அமைதியுடன் ஒப்பிடக் கூடாதெனக் குறிப்பிட்ட நீதிபதி சஞ்சய் கரோல், அந்தச் சிறுவயதில் அதிர்ச்சியால் அந்தக் குழந்தை பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பார். அவரை மட்டுமே பற்றிக்கொண்டிராமல் பிற சாட்சியங்களின் அடிப்படையில் (அனைத்தும் அவர் குற்றமிழைத்ததைக் காட்டுகின்றன) குற்றம் சாட்டப்பட்டவர் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றார்.
நான்கு வாரங்களுக்குள் சரணடைய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கும் அந்த வல்லுறவுக் குற்றவாளி சத்ராவுக்கு இப்போதுவயது 60-க்கும் மேல்!
*
புது தில்லியில் தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்ல வளாகத்தில் இருக்கும் அறையொன்றில் மார்ச் 14 ஆம் தேதி இரவில் ஏற்பட்ட தீவிபத்தில் 4, 5 சாக்கு மூடைகளில் கட்டுக்கட்டாக கட்டி வைக்கப்பட்டிருந்த ‘கணக்கில் வராத பெரும் பணம்’ அரைகுறையாக எரிந்திருக்கிறது; பணத்தாள்களும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. ரூ. 15 கோடி வரை இருந்திருக்கலாம் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயணைப்புத் துறையினர் அழைக்கப்பட்டுத் தீயை அணைத்திருக்கின்றனர்.
ஆனால், ஏறத்தாழ ஒரு வார காலத்துக்குப் பிறகுதான் இந்த தீவிபத்து பற்றியும் பணம் கண்டெடுக்கப்பட்டது பற்றியும் வெளியே தெரியவந்தது. தீவிபத்தின்போது வெளியூர் சென்றிருந்த நீதிபதி யஷ்வந்த் வர்மா மறுநாள்தான் வீடு திரும்பியிருக்கிறார்.
இதுபற்றி விசாரித்து அறிக்கையளிக்குமாறு தில்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தேவேந்திர குமாரை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பணித்தார்.
மத்திய கூடுதல் பாதுகாப்புப் படையினரின் காவல் அறைக்கு அருகேயிருக்கும் விபத்து நடந்த அந்த அறை எப்போதும் பூட்டி வைக்கப்பட்டிருந்திருக்கிறது. இந்தப் பணம் எவ்வாறு இங்கே வந்தது? எரிந்த பணத்தை யார் அப்புறப்படுத்தியது? என்றெல்லாம் நீதிபதி உபாத்யாய எழுப்பிய கேள்விகளுக்குக் கடிதவழி பதிலளித்த நீதிபதி யஷ்வந்த வர்மா, இந்தப் பணத்துக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என மறுத்தார்.
‘பிரதான இல்லத்திலிருந்து தனியே வாயில் அருகே பூட்டப்படாத இந்த அறை இருக்கிறது; தேவைப்படாத பொருள்கள் அங்கே வைக்கப்பட்டிருக்கும். வேலையாள்கள் பலரும் வந்து செல்லக்கூடிய இடம். நானோ, குடும்பத்தினரோ அங்கே பணம் எதுவும் வைக்கவில்லை என்றும் நீதிபதி யஷ்ந்த் வர்மா குறிப்பிட்டார் (தீயணைப்புத் துறை அலுவலர் அங்கே பணம் எதுவுமே இல்லை என திடீரென மறுத்தார்; பிறகு அப்படி தாம் எங்கேயும் மறுக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்).
வர்மாவின் பதிலுடன் விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் உபாத்யாய அளித்தார். இதன் முக்கியமான அம்சங்கள், எரிந்த பணக்கட்டுகளின் புகைப்படங்கள், விடியோ போன்றவை நீதித்துறை வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத வகையில் உச்ச நீதிமன்றத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து, அடுத்தகட்ட விசாரணைக்காக பஞ்சாப் – ஹரியாணா மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சல் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்தாவாலியா, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகிய மூன்று நீதிபதிகள் குழுவை அமைத்திருக்கிறார் நீதிபதி சஞ்சீவ் கன்னா.
கொலீஜியத்தால் தற்போது அலாகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ள யஷ்வந்த் வர்மாவுக்கு பணிகள் எதுவும் ஒதுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. நீதிபதி வர்மாவை அலாகாபாத் நீதிமன்றத்துக்கு இட மாற்றம் செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து வழக்கறிஞர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதுடன், நீதிபதி வர்மா இதுவரை அளித்த வழக்குகளின் தீர்ப்புகளை மறு ஆய்வுக்குள்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர் (நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறியதற்காகத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான உயர் நீதிமன்ற நீதிபதியொருவர் விரைவான விசாரணை நடத்தித் தண்டிக்கப்பட்டதில் ஆறு மாதங்கள் சிறைவாசம் இருந்துவிட்டு வெளியே வந்தார்!).
நீதிபதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் நிறைய வழிகாட்டுதல்கள் இருக்கின்றன. நீதிபதி வர்மாவுக்கு எதிரான விசாரணை எப்போது முடியும் எனத் தெரியாது. எவ்வித காலவரையறையும் விதிக்கப்படவில்லை. இவ்வளவு கோடி பணம் கைப்பற்றப்பட்ட நிலையில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை.
ஆனால், ஒட்டுமொத்த இந்தியா மட்டும் அல்ல; உலகமே இந்த சம்பவத்தை உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது என்றால்கூட தவறில்லை; ஏனெனில், இந்திய நீதித்துறையின் செயல்பாடு சார்ந்த விஷயம் என்பதால்.
நீதிபதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீதித் துறையினரைக் கொண்டே (இன்-ஹௌஸ் – துறைசார் விசாரணை) ஏழு படிநிலைகளில் விசாரித்து முடிவு செய்வதென்ற நடைமுறை 1999-ல் உருவாக்கப்பட்டது; நீதித் துறையின் சுயேச்சைத் தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன் நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை காரணமாகவும்.
ஆனால், இந்தியாவில் லஞ்ச குற்றச்சாட்டுக்காக இதுவரையிலும் எந்த உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற நீதிபதியும் (விசாரணை முடிவில் நாடாளுமன்றத் தீர்மானத்தின் மூலம்) பதவி நீக்கப்பட்டதுமில்லை; தண்டிக்கப்பட்டதுமில்லை.
இந்தத் துறைசார் நடைமுறை என்பது ‘பாதுகாப்பானது’ என்றும் ‘திறனற்றது’ என்றும் பன்னாட்டு நீதிபதிகள் அமைவனம் – இன்டர்நேஷனல் கமிஷன் ஆஃப் ஜூரிஸ்ட்ஸ் – அறிக்கையொன்று தெரிவித்திருக்கிறது; உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக 1,600-க்கும் மேற்பட்ட புகார்கள் இருப்பதாகவும் இவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி எவ்விதத் தகவலும் இல்லை என்றும் 2022-ல் நாடாளுமன்றத்தில் மத்திய சட்டத் துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
தில்லியில் நீதிபதி இல்ல வளாக அறையில் கட்டுக்கட்டாகப் பணம் எரிந்த சம்பவத்தின் பின்னால் விடை தெரியாமல் ஏராளமான கேள்விகள் இருக்கின்றன.
இந்த அறைக்குள் இவ்வளவு பணத்தைக் கொண்டுவந்து வைத்தது யார்? எப்படி? எப்போது? அருகிலேயே காவலர்கள் அறை இருக்கும்போது இது எந்த அளவு சாத்தியம்?
வர்மாவுக்குச் சொந்தமானதில்லை என்றால் இந்தக் கட்டுக்கட்டான பணம் யாருக்குச் சொந்தமானது?
தீவைப்பு அல்லது மின்கசிவு காரணமான தீவிபத்தா, அல்லது திட்டமிடப்பட்டதா? என்பது பற்றி அறிவதற்காகக்கூட தில்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை எதையும் ஏன் பதிவு செய்யவில்லை?
தீவிபத்து நடந்த பகுதியைக் காவல்துறை ஏன் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவில்லை?
விபத்து நடந்த மறுநாள் காலையில் சம்பவ இடத்திலிருந்து எரிந்த பணத்தையும் பிற கழிவுகளையும் அகற்றியது யார்?
எரிந்த பணத்தை ஏன் நீதிபதி வர்மாவின் குடும்பத்தினருக்குக் காட்டவில்லை? (அவரே கூறியிருக்கிறார்).
விடியோவில் தெரிகிற எரிந்த பணத்தின் மிச்சம் எங்கே வைக்கப்பட்டிருக்கிறது? கைப்பற்றப்பட்டதா? இல்லையா?
நீதிபதி இல்ல வளாகத்திற்குள்ளும் எரிந்த அறைக்கும் ஆள்கள் வருகிற, வெளியேறுகிற காட்சிகளின் சிசிடிவி பதிவுகள் இருக்கின்றனவா? கைப்பற்றப்பட்டனவா?
முறையான காவல்துறை விசாரணை மூலம் ஒருவேளை உண்மை கண்டறியப்பட வாய்ப்புள்ளது. எனினும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அனுமதியின்றி உயர்நிலை நீதிபதிகள் தொடர்பாக வழக்குப் பதியவோ விசாரிக்கவோ இயலாது என்பதுதான் தற்போதைய நடைமுறை.
இவ்வளவு குழப்பான சூழ்நிலையில் நீதிபதிகளுக்கு எதிரான புகார்களில் துறைசார் விசாரணை என்ற தற்போதைய நடைமுறையே தவறு என்றும் கூறிவிட முடியாது; கூடாது. ஆனால், நீதித் துறையினருக்கான பொறுப்பை நீதித் துறை ஏற்க வேண்டும்; அதுவும் வெளிப்படைத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். ஒருவேளை இவையெல்லாம் அரசியல் மற்றும் அரசு அதிகாரங்களிடம் சென்றடைய நேர்ந்தால், எதிர்காலத்தில் நீதிபதிகளின் சுதந்திரமான செயல்பாடு தகர்க்கப்பட எல்லாவித வாய்ப்புகளும் இருக்கின்றன. அல்லது செயல்படவே முடியாத சூழலும்கூட ஏற்படலாம்.
(இதனிடையேதான், கொலீஜியம் முறையை மாற்றி, நீதிபதிகள் நியமனத்தில் நாடாளுமன்றத்தின் பங்களிப்பு தொடர்பான விவாதங்களை குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கர் தொடங்கியுள்ளார். இதன் நோக்கம் என்ன? எப்படி முடியும்? என்று தெரியவில்லை).
ஏற்கெனவே, குற்ற வழக்குகளில் விசாரணை நீதிமன்றத்தில் ஒரு நீதி, உயர் நீதிமன்றத்தில் ஒரு நீதி, உச்ச நீதிமன்றத்தில் ஒரு நீதியென மாறிக்கொண்டே செல்லும்போது சமுதாயத்தில் பெரும் தாக்கம் ஏற்படுகிறது; அதுவும் 20 ஆண்டுகள், 30 ஆண்டுகள் கழித்து என்கிறபோது மக்கள் வெகுவாகத்தான் குழம்பிப் போய்விடுகின்றனர். அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் ‘புகழ்பெற்ற’ தீர்ப்பைப் பெறுவதற்குள்ளேயே ரூ. 2.5 லட்சம் கடனாகிவிட்டதாகப் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் கூறுகிறார். நாட்டில்தான் எத்தனை நீதிமன்றங்கள்? எத்தனை வழக்குகள்? நீதிக்காகக் காத்திருப்போர் எவ்வளவு பேர்? நீதிதேவதைதான் கலங்கிப் போவாளோ?