கிளாமர் காளி கொலையில் தேடப்பட்டவர்; வெள்ளைக்காளியின் கூட்டாளி - மதுரை என்கவுன்ட்டர் பின்னணி
மதுரையில் வி.கே.குருசாமி - ராஜபாண்டி தரப்பினருக்குள் நீண்டகாலமாக பகை தொடர்ந்து வருகிறது. இதில் பழிக்குப்பழியாக கொலைகள் நடந்து வந்த நிலையில், சில நாள்களுக்கு முன் குருசாமியின் உறவினர் கிளாமர் காளி என்ற காளீஸ்வரன் படுகொலை செய்யப்பட்டார்.
அக்கொலையில் சமந்தப்பட்டதாக சொல்லப்பட்ட சுபாஷ் சந்திரபோஸை தேடிச்சென்றபோது, அவர் போலீஸாரை தாக்க, பதிலுக்கு போலீஸாரால் சுடப்பட்டதில் காயமடைந்து மரணமடைந்தார். இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய காவல்துறையினர், "ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டரத்தை பூர்வீகமாகக்கொண்டு மதுரைக்கு இடம்பெயர்ந்து திமுகவில் மாநகராட்சி மண்டலத் தலைவராகவும், கட்சியின் மாவட்ட நிர்வாகியாகவும் செல்வாக்குடன் இருந்த வி.கே.குருசாமிக்கும், அதேபோல் மாநகராட்சி மண்டலத்தலைவராக அதிமுக-வில் செல்வாக்குடன் இருந்த ராஜபாண்டி தரப்புக்கும் இடையே தனிப்பட்ட பகை பெரிதாக வளர்ந்து அடிக்கடி மோதல் ஏற்பட்டு கடந்த 22 ஆண்டுகளில் மாறி மாறி பழிக்குப் பழியாக 22 கொலைகள் நடந்துள்ளது.
ராஜபாண்டி மறைவிற்குப் பிறகு பல்வேறு வழக்குகளில் சிறையில் இருக்கும் அவருடைய உறவினர் வெள்ளைக் காளி வி.கே. குருசாமிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் கிளாமர் காளி என்ற காளீஸ்வரன் கொலை வழக்கில் வெள்ளைக் காளியின் தாயார் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். அக்கொலை வழக்கில் தொடர்புடைய சுபாஸ் சந்திரபோஸ் என்பவர் பிடிக்க விளாச்சேரிப் பகுதியில் தனிப்படை போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது காரில் வந்த சுபாஷ் சந்திரபோஸ் கத்தியை எடுத்து வெட்டியதில் இரண்டு போலீஸாருக்கு காயம் ஏற்பட்டது.
சரணடையும்படி இன்ஸ்பெக்டர பூமிநாதன் துப்பாக்கியை காட்டியபோது, சுபாஷ் சந்திரபோஸ் தான் வைத்திருந்த துப்பாக்கியால் இன்ஸ்பெக்டரை நோக்கி சுட்டதில் குறி தவறியுள்ளது. அதனால் தற்காப்புக்காக இன்ஸ்பெக்டர் திருப்பி சுட்டதில் சுபாஷ் சந்திரபோஸ் மார்பில் குண்டு பட்டு அங்கேயே இறந்தார்.

இந்த சம்பவம் மதுரையில் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வி.கே.குருசாமிக்கு ஸ்கெட்ச் போட்ட வெள்ளைக்காளியின் ஆட்கள் மதுரை கூடல் நகரில் தங்கியிருந்தபோது போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து மூன்றாவது என்கவுன்ட்டராக இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.