ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிசா வாலிபர்கள்.. ராமநாதபுரம் போலீஸார் விசாரணை; சிக்கியது எப்படி?
ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி கடலோர பகுதிகள் வழியாக இலங்கைக்கு போதை மருந்துகள், கஞ்சா உள்ளிட்டவை அதிகளவில் கடத்தப்பட்டு வருகிறது.
படகுகள் மூலம் கடத்தி செல்லப்படும் கஞ்சாவை இலங்கை கடற்படையினர் அடுத்தடுத்து கைபற்றி வருகின்றனர். பல்வேறு பாதுகாப்பு பிரிவுகளின் கண்காணிப்புகளையும் தாண்டி இது போன்ற கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்ட சேது எக்ஸ்பிரஸ் ரயிலில், ராமேஸ்வரம் இருப்பு பாதை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மயில் முருகன், சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில் ஆகியோர் தலைமையிலான காரைக்குடி வட்ட சிறப்பு குற்றத் தடுப்பு போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சத்திரக்குடி ரயில் நிலையம் அருகே அந்த ரயிலின் முன்பதிவு இல்லாத பயணிகள் பெட்டியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது அதில் அமர்ந்திருந்த இரு வாலிபர்கள் மீது சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து அவர்கள் வைத்திருந்த டிராவல் பேக்கை போலீஸார் சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது டிராவல் பேக்கில் ஏராளமான பார்சல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பிரித்து பார்த்த போது அவை அனைத்தும் கஞ்சா பார்சல்களாக இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கஞ்சா கடத்தி வந்தவர்கள், ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியைச் சேர்ந்த பிரதேஷ் மொகந்தி மற்றும் பிரியா பாரத் மொகந்தி எனவும் தெரிய வந்தது.

மேலும் இவர்கள் திருச்சியில் இருந்து மண்டபத்திற்கு கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கடத்தி வந்த 19.700 கி.கிராம் எடை கொண்ட கஞ்சா பார்சல்களை பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட கஞ்சா மற்றும் அதனை கடத்தி வந்த ஒடிசா மாநில வாலிபர்கள் இருவரையும் இருப்பு பாதை குற்றத் தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸார், ராமநாதபுரம் போதை தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.