கோடை விடுமுறையையொட்டி 3 நாள் சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்கலாம்: சுற்றுலாத்துறை
மருதமலை : நாளை கும்பாபிஷேகம்; நேற்று வெள்ளி வேல் திருட்டு - சாமியார் வேட ஆசாமியை தேடும் போலீஸ்
கோவை மாவட்டம், மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இது தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளுக்கு இணையாக பிரபலமான கோயிலாகும். பக்தர்கள் இந்த கோயிலை முருகனின் ஏழாவது படை வீடு என்றும் அழைப்பார்கள். தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஒவ்வொரு மாதமும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை புரிந்து வருகின்றனர்.
கும்பாபிஷேகம்
கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு இந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் மருதமலை கோயிலுக்கு நாளை (4.4.2025) கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்பிருந்தே கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் தொடங்கிவிட்டன. கும்பாபிஷேகம் காரணமாக மருதமலையில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

மறுபக்கம் கோயில் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு வருகிறது. இவ்வளவு பாதுகாப்பையும் மீறி நேற்று பட்டப்பகலில் ஒருவர் சாமியார் வேடத்தில் வந்து ரூ. 4 லட்சம் மதிப்பிலான வெள்ளி வேலினை திருடி சென்றுள்ளார்.
வேல் கோட்டம்
மருதமலை கோயில் அடிவாரத்தில் வேல் கோட்டம் என்கிற பெயரில் ஒரு தியான மண்டபம் உள்ளது. அங்கு பக்தர்கள் முருகனை வேல் ரூபத்தில் வழிபடுவது வழக்கம். இதற்காக மூலவருக்கு முன்பாக சுமார் இரண்டரை அடியில் வெள்ளி வேல் வைக்கப்பட்டிருந்தது. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.

நேற்று நண்பகல் 12 மணியளவில் சாமியார் வேடத்தில் ஒரு ஆசாமி அங்கு சென்றுள்ளார். அவர் பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி அந்த வெள்ளி வேலினை திருடி சென்றுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வடவள்ளி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.