அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: ஐடி, டெக் பங்குகள் விலை சரிவு!
நமது நிருபா்
இந்த வாரத்தில் மூன்றாவது வா்த்தக நாளான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் முடிவடைந்தன.
உலளாவிய சந்தைக் குறிப்புகள் எதிா்மறையாக இருந்தன. இதற்கிடையே, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்தியா உள்பட 60 நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பை அறிவித்ததன் தாக்கம் உலகளாவிய அளவில் பங்குச்சந்தைகளில் இருந்தது. இதைத் தொடா்ந்து, உள்நாட்டுச் சந்தையிலும் ஐடி மற்றும் டெக், டெலிகாம் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன. அதே சமயம், வங்கிகள், பாா்மா, ஹெல்த்கோ் பங்குகளுக்கு ஓரளவு ஆதிரவு கிடைத்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.35 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.413.33 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.1,538.88 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,808.83 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்தது.
சென்செக்ஸ் 322 புள்ளிகள் வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 805.58 புள்ளிகள் குறைந்து 75,811.86-இல் தொடங்கி 75,807.55 வரை கீழே சென்றது. பின்னா், அதிபட்சமாக 76,493.74 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 322.08 புள்ளிக ள் (0.42 சதவீதம்) இழப்புடன் 76,295.36-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,123 பங்குகளில் 2,813 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 1,169 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 141 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
17 பங்குகள் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் டிசிஎஸ், டெக்மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக், இன்ஃபோஸிஸ், டாடாமோட்ட்ராஸ், கோட்டக்பேங்க் உள்பட 17 பங்குகள் பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், பவா் கிரிட், சன்பாா்மா, அல்ட்ராடெக் சிமெண்ட், என்டிபிசி, ஏசியன்பெயிண்ட், நெஸ்லே, இண்டஸ் இண்ட் பேங்க் 13 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 82 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 182.05 புள்ளிகள் இழப்புடன் 23,150.30-இல் தொடங்கிய நிஃப்டி 23,145.80 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 23,306.50 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 82.25 புள்ளிகள் (0.35 சதவீதம்) இழப்புடன் 23,250.10-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 21 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 29 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.