இலங்கை சென்றடைந்தார் பிரதமர் மோடி!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றுள்ளார்.
தாய்லாந்து பயணத்தை முடித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக இலங்கை, தலைநகர் கொழும்பு நகரத்துக்கு இன்று (ஏப்.4) மாலை சென்றடைந்துள்ளார்.
மூன்று நாள் அரசு முறையாக மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணத்தில் இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்கவைச் சந்திக்கும் பிரதமர் மோடி எரிசக்தி, வர்த்தகம், தகவல் தொடர்பு, நவீனமயமாக்கல் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இருநாட்டு வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு குறித்து நாளை (ஏப்.5) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்பினைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் இலங்கை இடையே பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் நவீனமயமாக்கல் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த 10 முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்ற பின் முதல் முறையாக இலங்கை அதிபர் திசநாயக்க கடந்த டிசம்பர் மாதம் இந்தியா வந்திருந்தார்.
முன்னதாக, கடுமையான பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இலங்கை தற்போது மீண்டு வருகிறது. மேலும், 3 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையின் பொருளாதார நெருக்கடியின்போது இந்தியா சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான பணம் வழங்கி உதவி செய்தது.
இதையும் படிக்க:கொலையுண்ட மனைவி உயிருடன் கண்டுபிடிப்பு! 3 ஆண்டுகள் கழித்து கணவர் விடுதலை!