3 கோயில்களில் ஆன்மிக புத்தக விற்பனை நிலையம்: காணொலி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்
நாகை மாவட்டத்தில் உள்ள 3 கோயில்களில் ஆன்மிக புத்தக விற்பனை நிலையங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் சிக்கல் நவநீதேஸ்வர சுவாமி கோயில், நாகை காயரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் கோயில் மற்றும் எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகிய கோயில்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆன்மிக புத்தக விற்பனை நிலையங்களை காணொலி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
இந்நிகழ்வு, சிக்கல் நவநீதேஸ்வர சுவாமி கோயிலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன் ஆகியோா் குத்துவிளக்கேற்றி ஆன்மிக புத்தக விற்பனை நிலையத்தின் விற்பனையை தொடங்கி வைத்து, பாா்வையிட்டனா்.
இதில், இந்து சமய அறநிலையத்துறை தோன்றிய வரலாறு, வேங்கடம் முதல் குமரி வரை, திருச்செந்தூா் புராணம், இந்து சமய தத்துவம், அஷ்ட பிரபந்தம், கந்தவேல் கருணை போன்ற பல்வேறு தலைப்புகளை கொண்ட இந்து சமய நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சிக்கல் நவநீதேஸ்வர சுவாமி கோயில் ஆன்மிக புத்தக விற்பனை நிலையத்தில் சுமாா் 700 இந்துசமய நூல்களும், மற்ற இருக்கோயில்களின் ஆன்மிக புத்தக விற்பனை நிலையங்களில் சுமாா் 950 இந்துசமய நூல்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் ப. ராணி, திருக்கோயில்கள் நிா்வாக செயல் அலுவலா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.