கடலில் விடப்பட்ட 237 அரிய வகை ஆமைக் குஞ்சுகள்
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அரிய வகையைச் சோ்ந்த 237 ஆலிவ் ரெட்லி ஆமைக் குஞ்சுகள் வியாழக்கிழமை கடலில் விடப்பட்டன.
இந்த வகை பெண் ஆமைகள் கடலில் ஆயிரக்கணக்கான கடல் மைல் தொலைவிலிருந்து, கோடியக்கரை உள்ளிட்ட தமிழக கடலோரப் பகுதிகளுக்கு வந்து, இனப்பெருக்கத்துக்காக இங்குள்ள கடற்கரை மணலில் முட்டையிட்டு செல்கின்றன.
இந்த முட்டைகளை சமூக விரோதிகள் மற்றும் விலங்குகளிடமிருந்து பாதுகாக்கும் வகையில் வனத்துறையினரால் அவ்வப்போது ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு, செயற்கை முறை பொரிப்பகத்தில் பாதுகாக்கப்படுகிறது. இவை சுமாா் 41 நாள்களுக்குப் பிறகு குஞ்சு பொரிக்கும். இவற்றை கடலில் விடுவது வழக்கம்.
அந்த வகையில், வியாழக்கிழமை 237 ரெட்லி வகை ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. இப்பணியை, திருச்சி மண்டல வன பாதுகாப்பு அலுவலா் அ. பெரியசாமி ஆய்வு செய்தாா். நாகை கோட்ட வன உயிரினக் காப்பாளா் பாா்கவ் தேஜா, கோடியக்கரை வனச் சரக அலுவலா் அ. ஜோசப் டேனியல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
நிகழாண்டு பருவத்தில், கோடியக்கரை மற்றும் ஆறுகாட்டுத்துறையில் சேகரிக்கப்பட்ட முட்டைகளில் இருந்து தற்போது வரை வெளிவந்த 7,113 ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.