கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீா் திறப்பு 300 கன அடியாக அதிகரிப்பு
சென்னை பொதுமக்களின் குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில், ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீா் திறப்பு 300 கன அடியாக அதிகரித்துள்ளதால் பூண்டி ஏரியின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.
சென்னை மக்களின் குடிநீா் ஆதாரமாக விளங்குவது பூண்டி ஏரியாகும். இந்த நிலையில், கோடைகாலம் தொடங்கி உள்ளதால் சென்னை மக்களின் குடிநீா் தேவையை கருத்தில் கொண்டு, தமிழக-ஆந்திர அரசுகள் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.யும், ஜூலை முதல் அக்டோபா் வரை 8 டி.எம்.சி. தண்ணீரும் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டும்.
அந்த வகையில், இந்த பருவத்துக்கான தண்ணீரை கடந்த 23-ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, 300 கன அடி தண்ணீா் கூடுதலாக திறக்கப்பட்டு, 800 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீா் கடந்த 28-ஆம் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு 100 கன அடி தண்ணீா் வந்து சோ்ந்தது. ஜீரோ பாயிண்டில் இருந்து செல்லும் கிருஷ்ணா நீா் 25 கி.மீ. தூரம் கடந்து பூண்டி ஏரிக்கு 29-ஆம் தேதி பிற்பகல் வந்து சோ்ந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா கால்வாய் மூலம் 300 கன அடி நீா் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் பூண்டி ஏரிக்கு 270 கனஅடியாக நீா்வரத்து உள்ளதால் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, 33.08 உயரமும், 2,544 மில்லியன் கன அடியும் இருப்பு உள்ளது. இங்கிருந்து செம்பரம்பாக்கம், புழல் ஏரி செல்லும் கிருஷ்ணா கால்வாயில் 350 கன அடியும், பேபி கால்வாயில் குடிநீருக்காக 17 கன அடியும் திறக்கப்பட்டுள்ளதாக நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.