CSK vs DC : 'வெயிட் பண்ணுங்க...திரிபாதி பெரிய ஸ்கோர் அடிப்பாரு!'- பேட்டிங் கோச் ஹஸ்ஸி நம்பிக்கை
'ஹஸ்ஸி பத்திரிகையாளர் சந்திப்பு!'
சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நாளை நடக்கவிருக்கிறது. இதற்காக நேற்று இரு அணிகளும் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் சென்னை அணியின் சார்பில் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்திருந்தார்.

ராகுல் திரிபாதியின் ஃபார்ம் குறித்து ரசிகர்கள் விமர்சித்து வரும் நிலையில், 'திரிபாதி மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.' என ஹஸ்ஸி பேசியிருக்கிறார்.
'சிஎஸ்கே மேம்படும்!'
மைக் ஹஸ்ஸி பேசுகையில், 'நாங்கள் எங்களின் சிறந்த செயல்பாட்டை கொடுக்கவில்லை. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆட்டத்தில் நாங்கள் எல்லாவிதத்திலுமே மேம்பட வேண்டியிருக்கிறது. சீசன் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. எங்களிடம் திறன் இருக்கிறது. நாங்கள் பேட்டிங், பௌலிங், பீல்டிங் என ஆட்டத்தின் எல்லா அம்சங்களிலும் மேம்படுவோம் என நினைக்கிறேன்.

'நூர் அஹமது பற்றி...'
கடந்த 12-18 மாதங்களில் நூர் அஹமது பெரும் வளர்ச்சியை அடைந்திருக்கிறார். ஸ்டீபன் ப்ளெம்மிங் அவரை SAT20, MLC என பல லீகுகளிலும் உன்னிப்பாக கவனித்து வந்தார். உலகளவில் பெரும்பாலான பேட்டர்கள் அவரின் பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறுகிறார்கள். அவரை ஏலத்தில் எடுத்தே ஆக வேண்டும் என்பதில் ப்ளெம்மிங் உறுதியாக இருந்தார்.
'பவர்ப்ளே பிரச்சனை சரியாகும்!'
நாங்கள் இதுவரைக்கும் பவர்ப்ளேயில் அவ்வளவு அதிரடியாக ஆடவில்லை. ஆனால், நாங்கள் ஆடும் விதத்தில் அப்படியே எங்களின் செயல்முறைகளில் சரியாக இருந்தால் பவர்ப்ளேயில் நல்ல ஸ்கோரை எடுத்துவிடுவோம் என நினைக்கிறேன். மேலும், கடந்த போட்டிகளில் நாங்கள் மிகச்சிறந்த பௌலிங்கை பவர்ப்ளேயில் எதிர்கொண்டிருந்தோம். பந்து பெரிதாக மூவ் ஆகவில்லையெனில் எங்கள் வீரர்களும் ரிஸ்க் எடுத்து ஆடுவார்கள். அதனால் நாங்கள் பவர்ப்ளேயில் ரன் வராதததை எண்ணி பதற்றப்படவில்லை.
'திரிபாதி மீது நம்பிக்கை!'
நம்பர் 3 இல் இறங்க வேண்டும் என்பதில் ருத்துராஜ் கெய்க்வாட்டே தீர்க்கமாகத்தான் இருந்தார். ஆரம்பத்திலேயே விக்கெட் விழும்பட்சத்தில் அவரால் பவர்ப்ளேயிலும் ஆட முடியும். மிடில் ஓவர்களில் வர வேண்டிய சூழல் ஏற்பட்டால் அவரால் ஸ்பின்னர்களையும் சிறப்பாக ஆட முடியும். அதனால்தான் ருத்துராஜ் நம்பர் 3 இல் வருகிறார். அவரை சுற்றி மற்ற வீரர்கள் ஆடும்படி ஆர்டர் அமைக்கப்பட்டிருக்கிறது.

ராகுல் திரிபாதியை ஓப்பனிங்கில் இறங்கி அட்டாக்கிங்காக ஆடவே அணியில் எடுத்தோம். அவரால் இன்னும் அப்படி ஆட முடியவில்லை. ஆனாலும் அவர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. வெகுவிரைவிலேயே அவர் பெரிய ஸ்கோரை அடிப்பார்.' என்றார்.