2034-இல் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை அமல்! - நிர்மலா சீதாராமன்
மியான்மர் நிலநடுக்கம்: மீட்புப் பணியில் இலங்கை ராணுவம்!
மியான்மர் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அங்கு மீட்புப் பணிகளை மேற்கொள்ள 3 ராணுவப் படைகளை அனுப்பவுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தினால் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டதுடன் இடிபாடுகளினுள் சிக்கியவர்களை மீட்கும் பணியானது ஒரு வாரத்துக்கும் மேலாக நடைபெற்று வருகின்றது.
இதில், சர்வதேச நாடுகளும் உதவிக்கரம் நீட்டி மியான்மரில் மீட்புப் பணியில் ஈடுபட்டு நிலையில் தற்போது அதில் இலங்கையும் இணைந்துள்ளது.
அந்நாட்டில் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து கட்டட இடிபாடுகளினுள் சிக்கியுள்ள மக்களுக்கும் அரசுக்கும் உதவ மீட்பு, நிவாரணம் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய 3 ராணுவப் படைகளை மியான்மருக்கு அனுப்பவுள்ளதாக இலங்கையின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, சிறப்பு விமானம் மூலம் நிவாரணப் பொருள்கள் மற்றும் ராணுவப் படையினர் இன்று (ஏப்.5) மியான்மர் செல்லவுள்ளனர். மேலும், நிவாரண நிதியாக இலங்கை அரசின் சார்பில் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படவுள்ளது.
இதனிடையே, மியான்மர் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் வரலாற்று ரீதியாக புத்தமத பிணைப்புள்ளதினால், இலங்கையின் புத்த மதக்குழுக்கள் நிவாரணப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், புத்தமதத்தின் புனித தளங்களில் ஒன்றான தி டெம்பிள் ஆஃப் டூத் சார்பில் மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட ரூ.1.5 கோடி மியான்மர் நிலநடுக்க மீட்புப் பணிக்காக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மியான்மரில் கடந்த மார்ச்.28 அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 3,100-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 5,000 பேர் படுகாயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மெக்சிகோ: பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட முதல் சிறுமி